வெளியேறியது லிவர்பூல்

வெளியேறியது லிவர்பூல்

2 mins read
0ae5551e-79ec-4a14-95dc-d282dcc29044
கோல் வலையை நோக்கிச் செல்லும் பந்தைத் தடுத்து நிறுத்தும் அட்லெட்டிகோ மட்ரிட் கோல்காப்பாளர் யான் ஒப்லாக் (வலக்கோடி). படம்: ஏஎஃப்பி -

லிவர்பூல்: சாம்பியன்ஸ் லீக் தகுதிச் சுற்று போட்டியில் அட்லெட்டிகோ மட்ரிட்டை நேற்று அதிகாலை எதிர்கொண்ட லிவர்பூல் ஆட்டத்தின் 94ஆம் நிமிடம் வரை இரண்டு கோல்கள் போட்டு மொத்த கோல் எண்ணிக்கையில் முன்னணி வகித்தபோதும் இறுதியில் காலிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறும் அவல நிலைக்கு ஆளானது.

ஆட்டத்தின் 43ஆம், 94ஆம் நிமிடங்களில் லிவர்பூலின் வைன்ஹால்டம், ஃபர்மினோ ஆகியோர் போட்ட கோல்களால் சாம்பியன்ஸ் லீக் விருதை ஏழாவது முறையாக வெல்லும் கனவில் லிவர்பூல் மிதந்திருக்க, கோல்காப்பாளர் ஏட்ரியனின் தவறால் 97ஆம் நிமிடத்தில் அட்லெட்டிகோ மட்ரிட்டின் லெரோன்டே ஒரு கோல் போட லிவர்பூல் அணியினர் கொண்ட கனவு மெல்ல மெல்ல சிதைய ஆரம்பித்தது. இரு குழுக்களும் 2-2 என மொத்த கோல் எண்ணிக்கையில் சமநிலையில் இருக்க, ஆட்டம் கூடுதலாக 30 நிமிடங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில்தான், அதே லொரோன்டேஆட்டத்தின் 105ஆம் நிமிடத்தில், மேலும் ஒரு கோல் போட்டு லிவர்பூலின் கனவுகளை சிதைத்தார்.

முதல் சுற்று விளையாட்டில் ஏற்கெனவே ஒரு கோல் போட்ட கையுடன், தற்பொழுது எதிரணியின் மைதானத்தில் இரண்டு கோல்கள் போட்டு முன்னணி பெற்றுவிட்ட நிலையில், ஆட்டம் கிட்டத்தட்ட முடியும் தறுவாயில், கடைசி நிமிடத்தில் அட்லெட்டிகோ மட்ரிட் குழு முன்னாள் செல்சி வீரர் அல்வாரோ மொராட்டா என்பவரின் மூலம் மேலும் ஒரு கோல் போட்டு லிவர்பூலை மீளாத் துயருக்கு ஆளாாக்கினார்.

நேற்றைய ஆட்டம் உண்மையில் இரு கோல்காப்பாளர்களுக்கு இடையேயான போட்டி என்றே காற்பந்து விமர்சகர்கள் கூறுவதாக பிபிசி செய்தித் தகவல் தெரிவிக்கிறது.

ஒருபுறம், லிவர்பூலுக்கு எதிரான முதல் கோலுக்கு அதன் கோல்காப்பாளர் ஏட்ரியன் பந்தை முறையாக உதைத்து வெளியேற்றாமல் போனதால் வர, மறுபுறம் அட்லெட்டிகோ மட்ரின் கோல்காப்பாளரான யான் ஒப்லாக் என்பவர் தமது கோல் எல்லையில் ஈடு இணையற்ற அரணாக விளங்கி மொத்தம் ஒன்பது முறை தம்மை நோக்கி வந்த பந்தை கோல் புகாமல் பார்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

லிவர்பூலின் சொந்த மைதானமான ஆன்ஃபீல்டில் நேற்றைய ஆட்டம் இடம்பெற்றது. அங்கு கூடும் லிவர்பூல் ரசிகர்களின் கூட்டமும் அதில் எழும் இரைச்சலும் எந்த அணியையும் நிலைகுலையச் செய்யக்கூடியது. அதையும் மீறி இறுதிவரை விட்டுக்கொடுக்காது போராடி வென்ற அட்லெட்டிகோ மட்ரிட் அணி உண்மையிலேயே பாராட்டுக்குரியது என காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.

எந்த நிலையிலும் நிலைகுலையாமல் இருக்கும் ஓர் அணியாக அட்லெட்டிகோ மட்ரிட் அணியை அதன் நிர்வாகி டியேகோ சிமியோனே உருவாக்கியுள்ளதாக பார்வையாளர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்.

பிஎஸ்ஜி வெற்றி

மற்றோர் ஆட்டத்தில், பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) குழு 2-0 என பொருசியா டோர்ட்மண்ட் குழுவை வீழ்த்தி, 3-2 என்ற மொத்த கோல் எண்ணிக்கையில் காலிறுதிக்கு தகுதி பெற்றது.