லண்டன்: சீனாவில் தொடங்கிய கொரோனா கிருமித்தொற்று, இப்போது உலகளவில் பரவி வருகிறது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் ஒன்று பிரிட்டன். கிருமி பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பார்வையாளர்கள் இன்றி அந்நாட்டில் காலி அரங்குகளில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டங்களை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
அந்த ஏற்பாடு நடைமுறைக்கு வந்தால், நடப்பு லீக் பருவத்தில் எஞ்சிய ஆட்டங்களை நேரில் காண காற்பந்து ரசிகர்கள் அரங்கிற்கு வர முடியாது.
நடப்பு லீக் பருவத்தையே ஒத்திவைப்பதற்குப் பதிலாக, இந்த ஏற்பாடு மூலம் ஆட்டங்கள் தொடர்ந்து நடைபெற வாய்ப்பு அளிக்கப்படும்.
இந்த ஏற்பாடு நடப்புக்கு வந்தால், பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக, மதுபானக் கூடங்களிலும் காற்பந்து ஆட்டங்கள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படாது.

