இங்கிலிஷ் பிரிமியர் லீக் தற்காலிக நிறுத்தம்

2 mins read
ad8e1ae7-4623-4a2e-ae8d-009e905639df
-

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியும் பெண்களுக்கான காற்பந்து லீக்கும் கொரோனா கிருமித்தொற்று காரணமாக அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் போட்டியிடும் ஆர்சனலின் நிர்வாகி மிக்கேல் ஆர்ட்டேட்டாவும் செல்சி ஆட்டக்காரர் கேலம் ஹட்சன்-ஒடோய்க்கும் கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆர்ட்டேட்டா தம்மைச் சுயமாக தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த ஆர்சனல் ஊழியர்களும் அவ்வாறு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆர்சனல் குழுவின் நிர்வாகம் அக்குழுவின் பயிற்சி மைதானத்தை மூடிவிட்டது.

"இது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. உடல்நலம் இல்லாத காரணத்தால் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டேன். அனுமதி கிடைத்ததும் உடனடியாகப் பணியைத் தொடர்வேன்," என்று ஆர்ட்டேட்டா கூறினார்.

செல்சியின் 19 வயது ஹட்சன்-ஒடோய் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல் இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டக்காரர் ஆவார். இதனால் செல்சியின் வீரர்களும் அவர்களுக்குப் பயிற்சி அளிப்போரும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆட்டங்கள் குறித்து செல்சி, பிரிமியர் லீக் அதிகாரிகளுடன் கலந்துரையாட இருக்கிறது. ஆஸ்டன் வில்லாவை அது நாளை சந்திக்க இருந்தது.

இதற்கிடையே, மான்செஸ்டர் சிட்டியின் ஆட்டக்காரர் ஒருவருடைய குடும்ப உறுப்பினருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அவரும் தம்மை தனிமைப்படுத்திக்கொண்டார். ஆட்டக்காரரின் பெயரை செல்சி வெளியிடவில்லை.

எவர்ட்டனும் அதன் ஆட்டக்காரர்கள் அனைவரையும் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள பணித்துள்ளது. அக்குழுவின் ஆட்டக்காரர் ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லெஸ்டர் சிட்டியின் மூன்று ஆட்டக்காரர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

தனது கோல்காப்பாளரும் நான்கு ஊழியர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டதாக போர்ன்மத் கூறியது.

பிரெஞ்சு லீக் காற்பந்துப் போட்டி ஆட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சாம்பியன்ஸ் லீக், யூரோப்பா லீக் ஆகியவற்றின் ஆட்டங்களையும் ஐரோப்பிய காற்பந்துச் சம்மேளனம் ஒத்திவைத்துள்ளது.

வரும் ஜூன் மாதம் தொடங்க இருக்கும் யூரோ 2020 காற்பந்துப் போட்டியை ஒத்திவைப்பது குறித்து கலந்துரையாட ஐரோப்பிய காற்பந்துச் சம்மேளனம் அவசரக்கூட்டம் ஒன்றை நடத்த இருக்கிறது.

இந்தக் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூரோ 2020 போட்டியை ஓராண்டுக்கு ஒத்திவைப்பதற்கான சாத்தியங்கள் ஆராயப்படும் என்று கூறப்படுகிறது.

யூரோ 2020 மட்டுமின்றி ஐரோப்பாவில் நடைபெறும் அனைத்து காற்பந்துப் போட்டிகளைப் பற்றி கூட்டத்தில் பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜூன் மாதம் 12ஆம் தேதியிலிருந்து ஜூலை 12ஆம் தேதி வரை ஐரோப்பாவில் உள்ள பல நகரங்களில் யூரோ 2020 நடைபெறுவதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.