மும்பை: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆட்கொல்லி நோயான கொரோனா கிருமி பாதிப்பு, ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூட தடை, வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு வருவதற்குரிய விசா வழங்குவது ஏப்ரல் 15 வரை நிறுத்தம் போன்ற காரணங்களால் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ஆம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, 8 அணிகள் இடையிலான 13வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை வருகிற 29ஆம் தேதி மும்பையில் தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அவை அத்தனையும் நிறுத்தப்பட்டுவிட்டன.
ஐபிஎல் போட்டிகள் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூட்டம் மும்பையில் சனிக்கிழமை மாலை நடந்தது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா, ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஐபிஎல் ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸின் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து ஏழு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. போட்டிகளின் எண்ணிக்கையை குறைப்பது, அணிகளை இரு பிரிவாகப் பிரித்து லீக் சுற்றில் மோதவிட்டு அதில் டாப்-4 அணிகளை பிளே-ஆப் சுற்றில் விளையாட வைப்பது, வாரஇறுதி நாட்களில் இரட்டை ஆட்டங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, 60 ஆட்டங்களையும் ரசிகர்கள் இன்றி நடத்துவது உள்ளிட்ட வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
இருப்பினும் போட்டிகளை வெளிநாட்டுக்கு மாற்றுவது குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. ஜூன் மாதம் அனைத்துலகப் போட்டிகள் வந்துவிடும் என்பதால் மே 31க்குள் ஐபிஎல் போட்டிகளை முடித்தாக வேண்டிய நெருக்கடியில் இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளது.
கூட்டத்திற்குப் பின் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், "ஏப்ரல் 15ம் தேதி போட்டிகளைத் தொடங்கினால் அது குறைக்கப்பட்ட போட்டிகள் கொண்ட தொடராகவே இருக்கும். எத்தனை போட்டிகள் என்பதை என்னால் இப்போது கூறமுடியாது. பார்வை யாளர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்துவது பற்றிகூட ஏப்ரல் 15க்குப் பிறகே முடிவெடுக்கப்படும்.
"போட்டிகள் தொடங்கும் தேதி குறித்து இப்போதைக்கு கூறுவதற்கில்லை," என்றார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா கூறுகையில், "ஐபிஎல் போட்டிகள் எப்போது தொடங்கும் என்பது இப்போதைக்கு யாருக்கும் தெரியாது. 2, 3வாரங்கள் கழித்து கொரோனா பாதிப்பு நிலைமையை ஆய்வுசெய்த பின் அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்வோம்," என்றார்.

