ரோம்: இத்தாலியில் கெரோனா கிருமித்தொற்று வேகமாகப் பரவிவருவதால் அந்நாடு நெருக்கடியைச் சந்தித்து வருசிறது.
இதைத் தொடர்ந்து, கிருமித்தொற்று காரணமாக தற்பொழுது நிறுத்திவைக்கப்பட்டுள்ள இத்தாலிய லீக் காற்பந்துப் போட்டிகளை முதலில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இதற்காக இவ்வாண்டு ஜூன் மாதம் நடைபெறுவதாக உள்ள யூரோ 2020 காற்பந்துப் போட்டிகளை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்குமாறு இத்தாலிய காற்பந்துச் சங்கம் ஐரோப்பிய காற்பந்து சங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதன் தொடர்பில் ஐரோப்பிய காற்பந்துச் சங்கத்தின் அவசரநிலை கூட்டத்தில் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்படும் என்று இத்தாலிய காற்பந்துச் சங்கத்தின் தலைவர் கேப்ரியெல் கிராவினா கூறி உள்ளார்.
'ஸ்போர்ட்மீடியாசெட்' என்ற தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், "யூரோ வெற்றியாளர் போட்டிகளை ஒத்திவைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்வோம். இத்தாலிய காற்பந்துக் குழுக்கள் செய்துள்ள முதலீடுகள், தியாகங்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு முதலில் நாம் லீக் போட்டிகளை முடிவுக்குக் கொண்டுவருவதே நியாயமானதாகவும் சரியானதாகவும் இருக்கும்," என்று விளக்கினார்.
இந்நிலையில், இது தொடர்பாக ஐரோப்பிய காற்பந்துச் சங்கம் அதன் 55 உறுப்பினர் சங்க பிரதிநிதிகளையும் நேற்று காணொளி மாநாடு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது இங்கு நினைவு கூரத்தக்கது.
இதற்கிடையே, இத்தாலியில் நிலவும் கொரோனா கிருமித்தொற்று ெநருக்கடியால் யூரோ 2020 காற்பந்துப் போட்டிகளை அடுத்த ஆண்டு, அதாவது 2021ஆம் ஆண்டு, வைத்துக்கொள்ளலாம் என்று இத்தாலிய தேசிய காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளர் ராபர்ட்டோ மன்சினி தெரிவித்துள்ளார்.
"இவ்வாண்டு கோடை காலத்தில் நடைபெறவுள்ள ஐரோப்பிய காற்பந்துப் போட்டிகளில் வென்று விருதை இத்தாலி தட்டிச் செல்வது உறுதி.
"இதையே அடுத்த ஆண்டில் நாம் செய்யலாம்," என்று ராய் ஸ்போர்ட் என்ற இத்தாலிய தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஐரோப்பிய காற்பந்துச் சங்கம் என்ன முடிவு எடுக்கிறது என்று பார்ப்போம். எந்த முடிவுக்கும் ஏற்றவாறு என்னால் சரிசெய்து ெகாள்ள முடியும். தற்போதைய நிலையில் மனித உயிர்களைக் காப்பதே முக்கியம்," என்று அவர் தெரிவித்தார்.

