சிட்னி: இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர்கள் இருவரால் தமது தூக்கத்தைத் தொலைத்ததாக ஒருநாள், டி20 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் ஃபின்ச் தெரிவித்து இருக்கிறார்.
ஜஸ்பிரீத் பும்ராவும் புவனேஸ்வர் குமாருமே அவர் குறிப்பிட்ட இந்திய வீரர்கள்.
கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. அந்த மூன்று வகைப் போட்டிகளிலுமே இந்திய வீரர்களின் பந்துகளை எதிர்கொள்ளத் திணறினார் ஃபின்ச்.
"புவனேஸ்வரின் 'இன் ஸ்விங்' பந்துகளுக்குப் பலமுறை எனது விக்கெட்டைப் பறிகொடுத்தேன். அதை எண்ணியபடியே தூங்கியதால் திடீரென வேர்த்துக்கொட்டி, நடுநடுவே எழ நேரிட்டது," என்று அவர் நினைவுகூர்ந்தார்.
அப்போது, மூன்று ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டி20 போட்டியிலும் புவனேஸ்வரின் பந்துவீச்சில் ஃபின்ச் ஆட்டமிழந்தார்.
அதேபோல, மறுநாள் பும்ராவின் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வது என நினைத்தே தூக்கத்தை இழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
"பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழப்பதுபோல கனவு கண்டு எழுந்துவிட்டேன். அதனால் மறுநாள் அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது எப்படி என நினைத்தே தூங்க முடியாமல் தவித்தேன்," என்றும் ஃபின்ச் சொன்னார்.
அந்தச் சுற்றுப்பயணத்தில் 3-1 என டெஸ்ட் தொடரையும் 2-1 என ஒருநாள் தொடரையும் இந்தியா கைப்பற்றியது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது.

