மாலகா: கொரோனா கிருமி தாக்கியதால் 21 வயதேயான காற்பந்துப் பயிற்றுவிப்பாளர் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் ஸ்பெயினில் நிகழ்ந்தது.
ஃபிரான்சிஸ்கோ கார்சியா (படம்) என்ற இந்தப் பயிற்றுவிப்பாளர் லுக்கீமியா எனும் ரத்தப் புற்று நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.
தம்மை கொரோனா கிருமி தொற்றியதற்கான அறிகுறிகள் தென்பட்டதும் அதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக மாலகா வட்டார மருத்துவமனைக்கு கார்சியா சென்றார்.
அங்கு கார்சியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கொரோனா கிருமித்தொற்று, நிமோனியா ஆகியவற்றோடு ரத்தப் புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர்.
மாலகாவை மையமாகக் கொண்ட அட்லெட்டிகோ போர்ட்டடா அல்டா என்ற குழுவின் இளையர் அணிக்கு இவர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பயிற்சியளித்து வந்தார்.
கார்சியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமக்குத் தகவல் கிடைத்ததாக அட்லெட்டிகோ போர்ட்டடா அல்டா குழுவின் தலைவர் பெப் பியூனோ தெரிவித்தார்.
ஆயினும், அடுத்த ஒரு மணி நேரத்திலேயே கார்சியாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதாகத் தகவல் வந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
"என்னால் நம்ப முடியவில்லை. அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என எனக்குத் தோன்றியது," என்று திரு பியூனோ சொன்னதாக 'தி இன்டிபென்டென்ட்' ஊடகச் செய்தி கூறுகிறது.
மாலகா வட்டாரத்தில் இதுவரை ஐவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டனர். அவர்களில் ஆக இளையவர் கார்சியாதான். மற்ற நால்வரும் 70 வயதைத் தாண்டியவர்கள்.
ஸ்பெயினில் கொரோனா கிருமித்தொற்று பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதை அடுத்து அங்கு அனைத்து முன்னணி காற்பந்து லீக் ஆட்டங்களும் கால வரம்பின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கிருமித்தொற்றால் அங்கு இதுவரை 342 பேர் மாண்டுவிட்டனர்; கிட்டத்தட்ட 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

