வெலன்சியா: முன்னணி ஸ்பானிய காற்பந்துக் குழுக்களில் ஒன்றில் வெலன்சியா ஆட்டக்காரர்கள், பணியாளர்களில் மூவரில் ஒருவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டு உள்ளதாக அக்குழு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவர்கள் அனைவருக்கும் கிருமி தொற்றியதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை என்பதுதான் வியப்புக்குரிய தகவல்.
அர்ஜெண்டினாவின் எசக்கியல் கராய், பிரான்சின் எலியாகுவிம் மாங்களா உள்ளிட்ட ஐவரைக் கிருமி தொற்றியதாக கடந்த ஞாயிறன்று வெலன்சியா தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, ஆட்டக்காரர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் மருத்துவச் சோதனை நடத்தப்பட்டதில் மேலும் பலரைக் கிருமி தொற்றியிருப்பது தெரியவந்தது.
இத்தாலியின் அடலான்டா குழுவிற்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் விளையாடுவதற்காக வெலன்சியா குழு கடந்த மாதம் இத்தாலியின் மிலான் நகருக்குச் சென்றிருந்தது.
"அந்த ஆட்டத்திற்குப் பிறகு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் குழுவினரில் கிட்டத்தட்ட 35 விழுக்காட்டினரைக் கிருமி தொற்றிவிட்டது," என்று வெலன்சியா குழுவின் தலைவர் அனில் மூர்த்தி கூறினார்.
வெலன்சியா குழுவினரைக் கிருமி தொற்றியதையடுத்து அடலான்டா குழுவினர் அனைவரும் சுயமாக தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

