மட்ரிட்: கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளின் காற்பந்து லீக் போட்டிகள் மே மாத மத்தியில் மீண்டும் தொடங்கி, இந்தப் பருவத்திற்கான போட்டிகள் விளையாடி முடிக்கப்படும் என ஸ்பானிய காற்பந்து லீக் தலைவர் ஹாவியர் தெபாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனா பிரச்சினை ஓய்ந்துவிட்டால் அதற்கு முன்னதாகவே போட்டிகளைத் தொடங்க முடியும் என்றாலும் மே மாத மத்தியில் இருந்து போட்டிகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று திரு தெபாஸ் கூறினார்.
அப்படி மீண்டும் தொடங்கப்பட்டாலும் எல்லா ஆட்டங்களும் பார்வையாளர்களின்றி மூடிய அரங்கிற்குள் விளையாடப்படுமா என செய்தியாளர்களிடம் திரு தெபாசிடம் கேட்டனர்.
அதற்கு, "அது சம்பந்தப்பட்ட நாடுகளின் சுகாதாரத் துறை எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து அமையும். ஐரோப்பாவில் 30க்கு மேற்பட்ட லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவை அனைத்தையும் ஒரே காலத்தில் நடத்தி முடித்தாக வேண்டியிருக்கும்," என்று அவர் பதிலளித்தார்.
அத்துடன், யூரோ 2020 போட்டிகள் ஓராண்டு காலம் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதும் இந்தப் பருவ லீக் போட்டிகள் முடிந்து, அடுத்த பருவத்திற்கான லீக் போட்டிகள் உரிய காலத்தில் தொடங்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்பானிய காற்பந்து லீக்கில் விளையாடும் அனைத்து குழுக்களுக்கும் கொரோனா சோதனைக் கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
ஆனால், முதல் நிலை, இரண்டாம் நிலை லீக் குழுக்களைச் சேர்ந்த அனைவருக்கும் கிருமித்தொற்றுச் சோதனை நடத்த லீக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதற்கு ஸ்பானிய காற்பந்துச் சங்கத் தலைவர் லுவிஸ் ருபியாலெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஸ்பானிய லீக்கில் விளையாடி வரும் ஆலவேஸ் குழுவைச் சேர்ந்த 15 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ரியால் வயாடோலிட் குழுவினர் சோதனைக்குட்பட மறுத்துவிட்டனர். தேவைப்படுவோருக்கு அந்த சோதனைக் கருவிகளைத் தரலாம் என்பது அவர்களின் வாதம்.

