லாஸ் ஏஞ்சல்ஸ்: 32-வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 முதல் ஆகஸ்டு 9ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.
உலகையே புரட்டிபோட்டு விட்ட கொரோனா கிருமித் தொற்று, ஒலிம்பிக் போட்டியையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்க நீச்சல் சங்கம் ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்குத் தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது. அமெரிக்க நீச்சல் சங்கத்தின் தலைமை நிர்வாகி டிம் ஹின்செய், 'கொரோனா அச்சம் மற்றும் கட்டுப்பாடுகளால் அமெரிக்க நீச்சல் வீரர், வீராங்கனைகளின் பயிற்சி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
"வீரர்களின் நலன் கருதி ஒலிம்பிக்கை தள்ளிவைக்க குரல் கொடுக்க வேண்டும்," என்று வலியுறுத்தி அமெரிக்கா ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால் இதனை ஏற்க அமெரிக்கா ஒலிம்பிக் மற்றும் பாராஒலிம்பிக் கமிட்டி மறுத்து விட்டது. இதன் தலைவர் சுசானே லயன்ஸ் கூறுகையில், 'டோக்கியோ ஒலிம்பிக்கை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது தள்ளிவைப்பதா? என்பது குறித்து அவசரப்பட்டு இப்போதே முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் ஒலிம்பிக் அடுத்த வாரமோ அல்லது 2 வாரங்களிலேயோ தொடங்கவில்லை. இன்னும் 4 மாதங்கள் முழுமையாக இருக்கின்றன.
"முடிவு எடுப்பதற்கு முன்பாக நிபுணர்களிடம் இருந்து ஆலோசனைகளையும், தகவல்களையும் பெற வேண்டி உள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி) கூறியிருக்கிறது. அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்," என்றார்.

