டொரோன்டோ: இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணிப்பதாக கனடா அறிவித்துள்ளது. அதேபோல, ஆஸ்திரேலியா தனது விளையாட்டாளர்களை 2021 ஒலிம்பிக்கிற்கு ஆயத்தமாகும்படி அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா கிருமித்தொற்று பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், இப்படிப் பல திசைகளில் இருந்தும் ஒலிம்பிக் போட்டிகளைத் தள்ளிப்போடும்படி கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் போட்டிகளை ஏற்று நடத்தும் ஜப்பானுக்கும் அனைத்துலக ஒலிம்பிக் மன்றத்திற்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளை ஓராண்டுக்குத் தள்ளிப்போடும்படி கனடிய ஒலிம்பிக், பாராலிம்பிக் குழுக்கள் போட்டி ஏற்பாட்டாளர்களையும் உலகச் சுகாதார நிறுவனத்தையும் வலியுறுத்தியுள்ளது.
"போட்டிகளைத் தள்ளிப்போடுவதால் ஏற்படும் அனைத்து சிக்கல்களில் இருந்தும் விடுபட உதவ நாங்கள் முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக உள்ளோம்," என்று கனடிய ஒலிம்பிக், பாராலிம்பிக் குழுக்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
அப்படி போட்டிகளைத் தள்ளிப்போடுவதால் எழும் சிக்கல்களை அறிந்திருந்தாலும் விளையாட்டாளர்கள் மற்றும் உலக சமுதாயத்தின் சுகாதாரமும் பாதுகாப்பும் அதைவிட முக்கியம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கனடாவின் இந்த முடிவு குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை என அமெரிக்க ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், போட்டியை நடத்துவது தொடர்பில் மாற்றுச் சூழல்களைப் பரிசீலிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதை உணர்ந்துள்ளோம் என்று அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் கூறியிருப்பதை அமெரிக்காவும் கனடாவும் வரவேற்றுள்ளன.
முன்னதாக, அமெரிக்க ஒலிம்பிக் மன்றம் இணையம் வழியாக நடத்திய கூட்டத்தில் அந்நாட்டின் 300 விளையாட்டாளர்கள் கலந்துகொண்டனர் என்றும் அப்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நான்கில் மூன்று பங்கு விளையாட்டாளர்கள் ஒலிம்பிக் போட்டிகளைத் தள்ளிவைப்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்றும் 'யுஎஸ்ஏ டுடே' செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயாராகும்படி ஆஸ்திரேலியா தனது விளையாட்டாளர்களைக் கேட்டுக்கொண்டு இருக்கிறது.
"ஆஸ்திரேலிய விளையாட்டாளர்கள் தங்கள் உடல்நலனுக்கும் தம்மைச் சுற்றியுள்ளோரின் சுகாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கவேண்டியது அவசியம்," என்று ஆஸ்திரேலிய ஒலிம்பிக் மன்றம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நீச்சல் மன்றம், அமெரிக்க திடல்தட விளையாட்டாளர்கள் மன்றம், பிரிட்டிஷ் திடல்தட விளையாட்டாளர்கள் மன்றம் உள்ளிட்ட பல அமைப்புகளும் ஒலிம்பிக் போட்டிகளைத் தள்ளிவைக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளன.

