கொவிட்-19 கிருமித்தொற்றைக் காரணம் காட்டி, ஒலிம்பிக் போட்டிகளை ஓராண்டு காலம் தள்ளிப்போட வேண்டும் எனப் பல நாடுகளும் வலியுறுத்தி வரும் நிலையில், சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் நிலைமையை உற்றுநோக்கி வருகிறது. அதே நேரத்தில், போட்டிகளைத் தள்ளிவைக்க வேண்டும் எனும் கோரிக்கையை ஆதரிக்கிறதா என்பது பற்றி மன்றம் எதுவும் கூறவில்லை.
ஒலிம்பிக் தொடர்பான அண்மைய நிலவரங்கள் குறித்து அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் ஒரு வாரத்திற்கு முன் தேசிய ஒலிம்பிக் மன்றங்களைக் கலந்து ஆலோசித்ததாக சிங்கப்பூர் ஒலிம்பிக் மன்றம் குறிப்பிட்டது. தேசிய விளையாட்டுச் சங்கங்கள் தங்களின் பயிற்சித் திட்டங்களில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்துவருவதாகவும் மன்றம் குறிப்பிட்டது. நீச்சல், மேசைப் பந்து, படகோட்டம், துப்பாக்கிச் சுடுதல், சீருடற்பயிற்சி போன்ற விளையாட்டுகளில் சிங்கப்பூரர்கள் பங்கேற்கக் காத்திருக்கின்றனர்.

