கோல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இப்போதைய தலைவருமான சௌரவ் கங்குலி 50 லட்ச ரூபாய்க்கு அரிசி வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார்.
கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் 21 நாட்கள் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றாடம் கூலி வேலை செய்துவரும் தொழிலாளர்களும் அவர்தம் குடும்பத்தினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கு வங்க மாநில அரசுப் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டு உள்ளோரின் பசி தீர்க்கும் வகையில் 'லால் பாபா' அரிசி நிறுவனத்துடன் இணைந்து ரூ.50 லட்சத்திற்கு அரிசி வாங்கித் தருவதாக கங்குலி அறிவித்துள்ளார் என்று வங்காள கிரிக்கெட் சங்கம் ஓர் அறிக்கை மூலம் கூறியிருக்கிறது.
கங்குலியின் இந்த முயற்சி, மற்ற குடிமக்களும் இதேபோன்று நற்செயல்களில் ஈடுபட்டு, சமூகத்தில் பின்தங்கியுள்ளோருக்குக் கைகொடுப்பதை ஊக்குவிப்பதாக இருக்கும் என்றும் அச்சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 600க்கு மேற்பட்டோரைக் கிருமி தொற்றி இருக்கிறது.