பார்சிலோனா: கொவிட்-19 தொற்று காரணமாக ஏற்படும் பொருளியல் பாதிப்புகளை குறைக்க ஸ்பெயினின் பார்சிலோனா காற்பந்துக் குழு ஊழியர்கள், வீரர்கள் ஆகியோரின் சம்பளம் வெட்டப்படும் என்று அந்தக் குழுவின் இயக்குநர் சபை முடிவெடுத்துள்ளது.
இதில் ஆறு முறை உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் விளையாடிய லயனல் மெஸ்ஸி உள்பட தொழில் முறையாக விளையாடும் அனைத்து வீரர்களும் அடக்கம் என்று காணொளிக் காட்சி மூலம் இந்தப் பிரச்சினை குறித்து நேற்று முன்தினம் கூடி விவாதித்த அந்தக் குழுவின் இயக்குநர் சபை முடிவெடுத்துள்ளது.
இம்மாதம் 14ஆம் தேதி முதல் ஸ்பெயினில் அத்தியாவசிய அலுவல்கள் தவிர மற்ற நடவடிக்கைகள் யாவும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்நாட்டு மக்கள் அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மட்டுமே தங்கள் வீடுகளை விட்டுச் செல்ல முடியும்.
தற்போதைய நிலையில் அந்நாடு 15 நாட்களுக்கு, அதாவது இவ்வாரக் கடைசி வரை முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இது மேலும் நீட்டிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய கண்டத்தைப் பொறுத்தவரை இத்தாலிக்குப் பிறகு கொரோனா கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஸ்பெயின்தான்.
அங்கு இந்தக் கிருமித்தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 4,000ஐ தாண்டிவிட்டது.
மேலும், 56,000 பேரை இந்தக் கிருமி தொற்றியுள்ளது. "இந்நிலையில், இந்தப் புதிய பிரச்சினையால் ஏற்பட்டுள்ள தற்காலிகச் சூழலில், நிலைமைக்கு ஏற்றவாறு ஊழியர்களின் ஒப்பந்தங்களில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது," என்று பார்சிலோனா குழு நிர்வாகம் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
"புதிய சூழலில் பாதுகாப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக வேலை நேரம் குைறந்துள்ளது.
"இதன் காரணமாக, இந்த வேலை நேரம் குறைந்துள்ள அளவுக்கு ஊழியர்களின் சம்பளமும் குறைக்கப்படும்," என்று அந்த அறிக்கை விளக்கியது.
மேலும், பார்சிலோனா நகரம் இருக்கும் கெட்டலான் மாநில அரசின் சுகாதாரத் துறைக்கு தனது வளாக வசதிகளைத் தந்து உதவவும் தான் தயாராக உள்ளதாக அந்தக் குழு நிர்வாகம் கூறி
யுள்ளது.
இந்நிலையில், ஸ்பெயின் செய்தித்தகவல் ஒன்று பார்சிலோனா குழுத் தலைவருக்கும் அதன் இயக்குநர் சபைக்கும் பேச்சுவார்த்தை தொடர்வதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதன்தொடர்பில் விளையாட்டு வீரர்கள் சம்பள வெட்டை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தபோதும் இதுவரை இயக்குநர் சபை பரிந்துரைத்துள்ள நிபந்தனைகள் தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும் அவர்கள் சொன்னதாகக் கூறப்படுகிறது.

