'கட்டாய ஓய்வு வீரர்களுக்கு உதவும்'

'கட்டாய ஓய்வு வீரர்களுக்கு உதவும்'

2 mins read
c4353692-f3f4-4b99-b590-de85df6d7b8e
மூவ­கைப் போட்­டி­க­ளி­லும் ஓயாது விளை­யா­டும் வீரர்­க­ளின் நிலை­யைப் பார்க்­கும்­போது, தற்­போது கிடைத்­துள்ள இந்த ஓய்வு வர­வேற்­கக்­கூ­டி­யது என்கிறார்  இந்­திய அணிப் பயிற்­று­விப்­பா­ளர் ரவி சாஸ்­திரி. படம்: ஏஎஃப்பி -

மும்பை: தொடர்ந்து போட்­டி­களில் பங்­கேற்று வந்த இந்­திய கிரிக்­கெட் அணி­யி­னர் கொரோனா கிருமி பர­வ­லால் இப்­போது வீடு­களில் முடங்­கிக் கிடக்­கின்­ற­னர்.

இம்­மா­தத் தொடக்­கத்­தில்­தான் நியூ­சி­லாந்து சுற்­றுப்­ப­ய­ணத்தை முடித்­துக்­கொண்டு இந்­திய அணி தாய்­நாடு திரும்­பி­யது. அதன்­பின் தென்­னாப்­பி­ரிக்க அணி­யு­டன் மூன்று ஒரு­நாள் போட்­டி­களில் மோத­வி­ருந்த நிலை­யில், கிரு­மித்­தொற்று கார­ண­மாக அந்­தத் தொடர் ரத்து செய்­யப்­பட்­டது. இன்று தொடங்­க­வி­ருந்த ஐபி­எல் டி20 தொட­ரும் ஏப்­ரல் 15ஆம் தேதி வரை ஒத்­திப்­போ­டப்­பட்­டுள்­ளது.

இல்­லை­யெ­னில், ஐபி­எல் தொட­ருக்­காக இந்­திய அணி வீரர்­கள் தத்­த­மது குழுக்­க­ளு­டன் இணைந்து இது­நாள் வரை பயிற்சி மேற்­கொண்டு இருந்­தி­ருப்­பர். எதிர்­பாரா­த­வி­த­மாக, கிரு­மித்­தொற்று எல்­லாப் பயிற்­சி­க­ளை­யும் போட்­டி­களை­யும் முடக்­கி­விட்­டது.

கிரிக்­கெட் ரசி­கர்­க­ளுக்கு வேண்­டு­மெ­னில் போட்­டி­கள் ரத்தானதும் தள்­ளிப்­போ­டப்­பட்­ட­தும் கவலை அளிக்­க­லாம். ஆனால், கிரு­மிப் பர­வ­லால் இப்­போது கிடைத்­துள்ள கட்­டாய ஓய்­வை வர­வேற்­றுள்ள இந்­திய அணிப் பயிற்­று­விப்­பா­ளர் ரவி சாஸ்­திரி, அது வீரர்­களுக்குப் பெரி­தும் நன்மை பயக்­கும் என்­றும் தெரி­வித்­துள்­ளார்.

"நியூ­சி­லாந்து சுற்­றுப்­ப­ய­ணத்­தின் இறு­தி­யில் இந்­திய வீரர்­கள் களைப்­ப­டைந்­து­விட்­ட­னர். காயத்­தா­லும் உடற்­த­கு­திக் குறை­வா­லும் அவர்­கள் அவ­திப்­பட்டு வந்த நிலை­யில் இப்­போது கிடைத்­துள்ள ஓய்வு அவர்­க­ளுக்கு நல்­ல­தா­கவே அமை­யும். கடந்த பத்து மாதங்­க­ளாக அவர்­கள் அதி­க­மான போட்­டி­களில் ஆடி­விட்­ட­னர். அதன் பாதிப்பு அண்­மை­யில்­தான் வெளிப்­பட்­டது.

"கடந்த ஆண்டு மே 23ஆம் தேதி உல­கக் கிண்­ணப் போட்­டி­களுக்­காக இந்­தி­யா­வி­லி­ருந்து கிளம்­பி­னோம். அதன்­பின் 10, 11 நாட்­கள்­தான் வீட்­டில் இருந்­தோம். பின்­னர் வெஸ்ட் இண்­டீ­சுக்­குச் சென்­றோம். பிறகு இந்­தி­யா­வில் இரண்­டரை மாதங்­கள் விளை­யா­டி­னோம். அதன் பின்­னர் நியூ­சி­லாந்து சென்­றோம். மூவ­கைப் போட்­டி­க­ளி­லும் ஓயாது விளை­யா­டும் வீரர்­க­ளின் நிலை­யைப் பார்க்­கும்­போது, தற்­போது கிடைத்­துள்ள இந்த ஓய்வு வர­வேற்­கக்­கூ­டி­யது," என்­றார் ரவி சாஸ்­திரி.

நியூ­சி­லாந்­தில் இருந்து சரி­யான நேரத்­தில் இந்­தியா திரும்­பி­விட்­ட­தா­கக் குறிப்­பிட்ட அவர், தாங்­கள் இங்கு வந்த நாளி­லி­ருந்துதான் விமான நிலை­யங்­களில் பய­ணி­களைப் பரி­சோ­தனை செய்யத் தொடங்கியதாகவும் சொன்னார்.