டூரின்: சம்பளவெட்டுக்கு இத்தாலியின் யுவெண்டஸ் குழுவின் ஆட்டக்காரர்களும் பயிற்றுவிப்பாளரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பள வெட்டு மூலம் யுவெண்டசுக்கு இந்த நிதி ஆண்டில் $140 மில்லியன் மிச்சமாகும் என்று நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
கொரோனா கிருமித்தொற்று இத்தாலியை புரட்டி எடுத்துள்ளது. கிருமித்தொற்றால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிநிலையை யுவெண்டஸ் சமாளிக்க உதவும் வகையில் நான்கு மாதச் சம்பள வெட்டுக்கு அக்குழுவின் ஆட்டக்காரர்களும் பயிற்றுவிப்பாளரும் இணங்கியுள்ளனர்.
காற்பந்துப் போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் குழுக்களின் வருமானம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சம்பள வெட்டு தொடர்பான விவரங்கள் பற்றி ஆட்டக்காரர்கள், பயிற்றுவிப்பாளர் ஆகியோரிடம் அடுத்த சில வாரங்களில் தெரிவிக்கப்படும் என்று யுவெண்டஸ் குழுவின் நிர்வாகம் கூறியது.
யுவெண்டஸ் குழுவின் பாவ்லோ டைபாலா, டேனியேல் ருகானி, பிலேசே மடுயுடி ஆகிய மூன்று ஆட்டக்காரர்களுக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

