மும்பை: பிரதமரின் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு 80 லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா.
கொரோனா கிருமி பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக் கடியிலிருந்து மீள்வதற்கு தாராளமாக நிதி வழங்க பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். மேலும், பல்வேறு மாநில முதல்வர்களும் நிதியுதவி வழங்க அழைப்பு விடுத்திருந்தனர்.
இதற்கு பல்வேறு பிரபலங்கள், நிறுவனங்கள் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரோகித் சர்மா, பிரதமரின் நிவாரண நிதிக்கு 45 லட்சம் ரூபாயும் மகாராஷ்டிர முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும் ஃபீடிங் இந்தியா மற்றும் ஆதரவில்லாத நாய்களின் நலனுக்கான அமைப்பு ஆகியவற்றுக்கு தலா ரூ.5 லட்சமும் வழங்கியிருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

