மட்ரிட்: முன்னணி ஸ்பானிய காற்பந்துக் குழுவான ரியால் மட்ரிட் ஆட்டக்காரர்கள் தங்களது ஊதியத்தில் ஐந்தில் ஒரு பகுதியைக் குறைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாக அக்குழு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா கிருமித்தொற்றால் ஸ்பெயினில் 14,000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்; நூறாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து, ஸ்பானிய லீக் காற்பந்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரியால் மட்ரிட் காற்பந்துக் குழுவினரும் கூடைப்பந்துக் குழுவினரும் தங்களது ஊதியத்தில் 20% வரை குறைத்துக்கொள்ள தாங்களாக முன்வந்துள்ளனர். எஞ்சிய போட்டிகளும் நடந்து இந்தப் பருவம் முடிவுக்கு வந்தால் 10 விழுக்காடும் பருவம் பாதியிலேயே கைவிடப்பட்டால் 20 விழுக்காடும் ஊதியம் குறைக்கப்படும் என ஸ்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்மூலம் 56 மில்லியன் யூரோ வரை ரியால் குழுவிற்கு மிச்சமாகும் என்றும் கூறப்பட்டது.

