ஃபிஃபா தலைவர்: அவசரப்பட்டு காற்பந்துப் போட்டிகளைத் தொடங்க வேண்டாம்

பெர்ன்: கொரோனா கிரு­மித்­தொற்­றின் தாக்­கம் முழு­மை­யாக குறை­வ­தற்கு முன்பே அவ­ச­ரப்­பட்டு காற்­பந்து லீக் போட்­டி­க­ளைத் தொடங்­கி­விட வேண்­டாம் என்று அனைத்­து­ல­கக் காற்­பந்து சம்­மே­ள­னத் (ஃபிஃபா) தலை­வர் கியானி இன்­ஃபேன்­டினோ வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார். அவ்­வாறு செய்­தால் அது ஆபத்­தா­கி­வி­டும் என அவர் எச்­ச­ரித்­துள்­ளார்.

உல­கம் முழு­வ­தும் பர­வி­யுள்ள கொரோனா கிரு­மி­யின் கோரத்­தாண்­ட­வம் விளை­யாட்­டுத் துறை­யையே புரட்டி போட்­டு­விட்­டது. இரண்டு, மூன்று மாதங்­க­ளுக்கு எந்­தப் போட்­டி­களும் நடை­பெ­றாத நிலை ஏற்­பட்டு உள்­ளது. 

பிரிட்­டன், ஸ்பெ­யின், ஜெர்­மனி, இத்­தாலி, பிரான்ஸ் உள்­ளிட்ட ஐரோப்­பிய நாடு­களில் நடத்­தப்­படும் பிர­சித்­தி­பெற்ற காற்­பந்து லீக் போட்­டி­க­ளின் மூலம் பெரிய அள­வி­லான பணம் புர­ளும். 

கொரோனா கிருமி பர­வும் அச்­சத்­தால் இப்­போட்­டி­கள் அனைத்­தும் பாதி­யில் நிற்­கின்­றன. இத­னால் சம்­பந்­தப்­பட்ட நாட்டு காற்­பந்­துச் சம்­மே­ள­னங்­கள் நிதி நெருக்­க­டி­யில் சிக்­கித் தவிக்­கின்­றன. உலகக் கிண்­ணக் காற்­பந்து தகு­திச் சுற்று போட்­டி­களும் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

பல நாடு­களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவி­ர­ம­டைந்து வரும் வேளை­யில், போட்­டியை எப்­போது தொடங்­கு­ம் என்று காற்­பந்­துச் சம்­மே­ள­னங்­கள் எதிர்­பார்ப்­பு­டன் காத்­தி­ருக்­கின்­றன. ஸ்பா­னிய லீக், ஜெர்­மா­னிய லீக் போட்­டி­களை அடுத்த மாத இறுதி­யில் தொடங்­கு­வது குறித்து அந்­தந்த நாட்டு காற்­பந்­துச் சம்­மே­ள­னங்­கள் யோசித்து வரு­கின்­றன.

ஆனால், அவ்­வாறு அவ­ச­ரப்­ப­டு­வது ஆபத்­தில் முடிந்­து­வி­டும் என்று இன்­ஃபேன்­டினோ எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

“காற்­பந்­துப் போட்­டி­களில் உடல் ஆரோக்­கி­யம், பாது­காப்பு ஆகி­ய­வற்­றுக்­குத்­தான் முத­லில் முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­படும். மனித உயி­ரை­விட விளை­யாட்டு பெரி­தல்ல. காற்­பந்­துப் போட்­டி­களை நடத்­து­ப­வர்­கள்  இதைப் பின்­பற்­றும்­படி அறி­வு­றுத்­து­கி­றோம். 

“இதை நான் எவ்­வ­ளவு வலி­யு­றுத்­திச் சொன்­னா­லும் போதாது. எந்­த­வொரு லீக் போட்­டி­க­ளுக்­காக மனித உயிரை ஆபத்­தில் சிக்க வைப்­பது சரி­யா­னது அல்ல. உல­கம் முழு­வ­தும் ஒவ்­வொ­ரு­வ­ரின் மன­தி­லும் இந்த விஷ­யம் தெளி­வாக பதிய வேண்­டும்,” என்று நேற்று முன்­தி­னம் இன்­ஃபேன்­டினோ வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில் கூறி­னார்.

“நிலைமை 100 விழுக்­காடு பாது­காப்­பாக இல்­லாத பட்­சத்­தில் போட்­டி­க­ளைத் தொடங்­கி­னால் அது மிக­வும் பொறுப்­பற்ற செய­லாகி விடும். இன்­னும் சிறிது காலம் காத்­தி­ருக்க வேண்­டும். ஆபத்­தைத் தேடிப் போவ­தை­விட காத்­தி­ருப்­பதே நல்­லது,” என்­றார் அவர்.