தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன் இந்திய அணிக்குத் தேர்வு

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 போட்டிகளில் விளையாட இந்திய அணியிலும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவரது தந்தை நெசவுத் தொழிலாளி; தாயார் சாலையோரத்தில் உணவுக் கடை நடத்திவருகிறார்.

“சிறுவயது முதல் கிரிக்கெட் விளையாட்டில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டென்னிஸ் பந்தில் விளையாட ஆரம்பித்தேன். இருபது வயதில் தான் முறையாக கிரிக்கெட் பயிற்சியை துவங்கினேன். அப்போது தான் அண்ணன் ஜெயபிரகாஷ் மூலம் சென்னையில் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டிக்கு பிறகு அடுத்தடுத்து விளையாட வாய்ப்புகள் வந்தன. அப்போது பள்ளி படிப்புக்கு தேவையான புத்தகங்கள் கூட வாங்க முடியாத நிலையில் இருந்தோம். கிடைக்கும் பணத்தை சேர்த்து வைத்து தான் கிரிக்கெட் போட்டிக்கு செல்வேன். இப்படித்தான் எனது கிரிக்கெட் வாழ்க்கை துவங்கியது” என தனது கிரிக்கெட் பயணத்தில் அடியெடுத்து வைத்த கதையை பிபிசி செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்டார் நடராஜன்.

2014ம் ஆண்டு நடந்த ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணியில் விளையாட இவருக்கு முதன் முதலாக வாய்ப்பு கிடைத்தது. ஆனால், முதல் போட்டியிலேயே பந்துவீச்சு முறையில் ஆட்சேபம் எழுந்து சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து ஓராண்டு காலத்துக்கு அவரால் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள முடியவில்லை.

தொடர்ந்து கடுமையான பயிற்சிகளை மேற்கொண்ட அவர், தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று தம் திறனை வெளிப்படுத்தினார்.

தற்போது மீண்டும் தம் திறனை நிரூபித்துள்ளார் நடராஜன்.

29 வயதாகும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், இந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி, தனது யார்க்கர் திறமையால் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக, தோனி மற்றும் ஏ பி டி வில்லியர்ஸ் போன்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை அவுட்டாக்கியதால் அனைத்துலக அளவிலும் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளரும், இலங்கை அணியின் மூத்த கிரிக்கெட் வீரருமான முரளிதரன் பந்து வீச்சின் பல நுணுக்கங்களைக் கற்றுத் தந்ததாகக் குறிப்பிடுகிறார் நடராஜன்.

“பெங்களூரு அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் வெற்றிபெற்ற அதேநாளில் தான், ‘எனக்கு மகள் பிறந்திருக்கிறாள்’ என்ற மகிழ்ச்சியான செய்தியும் வந்தது. மிகவும் சந்தோஷமான தருணம் அது. எனது குழந்தையை நேரில் பார்ப்பதற்காக காத்திருக்கிறேன்” என புன்னகையுடன் கூறுகிறார் நடராஜன்.

நவம்பர் 27ம் தேதி முதல் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் டி20க்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலில் நடராசன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ திங்கட்கிழமை அறிவித்தது.

“என்னைப் போன்று கிராமத்திலிருந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், கடுமையான பயிற்சி தான் எனக்கு இந்த நல்ல வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது. எனக்கு மிகப்பெரிய ஆதரவு தந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்கிறார் தங்கராசு நடராஜன்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி, "கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் நடராஜன், இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்!" என கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!