ரியால் மட்ரிட் தலைமைப் பயிற்றுநர் பொறுப்பிலிருந்து ஸிடான் விலகல்
மட்ரிட்: ஸ்பானிய லாலீகா காற்பந்து லீக் விருதுக்கான போட்டியில் அட்லட்டிக்கோ மட்ரிட் குழுவிடம் தோற்றுப்போன சில நாட்களுக்குப் பிறகு ரியால் மட்ரிட் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஸினேடின் ஸிடான் தனது பொறுப்பிலிருந்து உடனடியாக விலகிக்கொண்டுள்ளார் என்று அந்நாட்டு ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணத்தை சாதனை அளவில் 13 முறை வென்றிருக்கும் ரியால் மட்ரிட் குழுவுக்கு இவ்வாண்டு சோதனை காலமாக இருந்தது.
இவ்வாண்டு ஐரோப்பிய வெற்றியாளர் கி்ண்ண அரை
யிறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் செல்சி குழுவிடம் தோல்வி கண்ட ரியால் மட்ரிட், இப்போது ஸ்பானிய லீக் விருதைப் கைப்பற்றும் முயற்சியிலும் தோல்வி அடைந்துவிட்டது.
கடந்த 11 ஆண்டுகளில் இம்முறைதான் அக்குழு எந்த விருதையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்ட ஊடகத் தகவல்கள் உண்மையென்றால், இரண்டாவது முறையாக ரியால் மட்ரிட் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த ஸிடானின் பணி ஒரு முடிவுக்கு வரும்.
1998ல் பிரான்ஸ் குழுவுக்கு விளையாடி உலகக் கிண்ணத்தை வென்ற ஸிடான், 2016 ஜனவரியில் ரியால் மட்ரிட் குழுவின் பயிற்றுவிப்பாளராக முதலில் சேர்ந்தார்.
2017ல் ஸ்பானிய லீக் விருதை வென்று தந்த ஸிடான், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணத்தை ரியால் மட்ரிட் வெல்வதற்குக் காரணமாக இருந்தார்.
பின்னர் 2018, மே 31ஆம் தேதி தமது பொறுப்பிலிருந்து விலகிய ஸிடான், 2019ல் மீண்டும் அக்குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகத் திரும்பி, 2020 ஸ்பானிய லீக் விருதையும் ஸ்பானிய சூப்பர் கிண்ணத்தையும் பெற்றுத் தந்தார்.
ஐரோப்பிய சூப்பர் லீக்கில் சேர முன்று குழுக்கள் தொடர்ந்து பிடிவாதம்
லண்டன்: புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டிருக்கும் ஐரோப்பிய சூப்பர் லீக்கில் சேரக்கூடாது என்று ஐரோப்பிய காற்பந்துக் கூட்டமைப்பு (யுயேஃபா) கடுமையான எச்சரிக்கை விடுத்தும் ஸ்பெயினின் பார்சிலோனா, ரியால் மட்ரிட், இத்தாலியின் யுவேண்டஸ் ஆகிய மூன்று குழுக்கள் தங்கள் முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளன.
முதலில் ஐரோப்பிய சூப்பர் லீக்கில் இணைந்துகொள்ள மொத்தம் 12 குழுக்கள் முன்வந்தன. அக்குழுக்களின் ரசிகர்கள், காற்பந்து நிர்வாக அமைப்புகள், சில குழுக்களின் அரசாங்கங்கள் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டத்திருந்து விலகிக் கொள்வதாக இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, செல்சி, டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்ஸ், ஆர்சனல், இந்தாலியின் ஏசி மிலான், இன்டர் மிலான், ஸ்பெயினின் அட்லட்டிக்கோ மர்டிட் ஆகிய ஒன்பது குழுக்கள் பின்வாங்கின.
ஆனால் பார்சிலோனா, ரியால் மட்ரிட், யுவேண்டஸ் ஆகிய மூன்று குழுக்களுக்கு எதிராக யுயேஃபா ஒழுங்கு முறை நடவடிக்கை எடுத்தும் அவை விடாப்பிடியாக தங்கள் முடிவைத் தற்காத்துப் பேசியுள்ளன.
லீக் விருதை வென்றும் பதவியிலிருந்து விலகினார் அன்டோனியா கோன்டே
மிலான்: இத்தாலி காற்பந்து லீக் விருதை 11 ஆண்டுகளுக்குப் பிறகு வென்றிருக்கும் இன்டர் மிலான் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான 51 வயது அன்டோனியோ கோன்டே, தமது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.
"எங்கள் நிர்வாகத்துக்கும் திரு கோன்டேக்கும் இடையே ஏற்பட்டுள்ள பரஸ்பர இணக்கத்தின் அடிப்படையில், அவருடைய ஒப்பந்தம் ஒரு முடிவுக்கு வருகிறது.
"அவரது கடுமையான உழைப்புக்கும் இன்டர் மிலான் குழுவை வழிநடத்துவதில் அவர் காட்டிய கடப்பாட்டுக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
"எங்கள் காற்பந்துச் சங்கத்தின் வரலாற்றில் அவரது பெயரும் இடம்பெற்றி ருக்கும்," என்று இன்டர் மிலான் காற்பந்துச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்தக் காற்பந்துச் சங்கத்தின் உரிமையாளர் ஒரு சீன செல்வந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் இங்கிலாந்தின் செல்சி, இத்தாலியின் யுவேண்டஸ் ஆகிய குழுக்களை வழிநடத்திய கோன்டே, 2019 மே மாதம் மூன்றாண்டு ஒப்பந்தத்தில் இன்டர் மிலான் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகச் சேர்ந்தார்.

