சிங்கப்பூர்: சிங்கப்பூர் தேசிய திடல்தட வீரர்கள் தோக்கியோவில் சாதனை நிகழ்த்த பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்துத் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தமது ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா கிருமிப் பரவல் சூழலில் கடுமையாகப் பாதிப்பட்டவற்றில் விளையாட்டு சமூகமும் ஒன்று என அவர் கூறியுள்ளார்.
தேசிய ஒலிம்பிக் வீரர்களையும் பாரா ஒலிம்பிக் எனப்படும் உடற்குறையுள்ளோருக்கான போட்டியில் பங்கேற்க இருப்போரையும் ஆதரிக்கும் விதமாக டீம் சிங்கப்பூர் எனப்படும் சிங்கப்பூர் குழு கடந்த ஏப்ரல் மாதம் பிரசார இயக்கம் தொடங்கியதை பிரதமர் நினைவுகூர்ந்தார். அவ்விரு போட்டிகளும் கொவிட்-19 சூழல் காரணமாக ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டு இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற இருக்கின்றன.
"ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தயாராகி வரும் நமது திடல்தட வீரர்களை ஆதரிக்க சிங்கப்பூர் குழு பிரசார இயக்கத்தை தொடங்கியது. கொவிட்-19 சூழலால் ஒலிம்பிக் போட்டிகளும் பாரா ஒலிம்பிக் போட்டிகளும் ஓராண்டுக்குத் தள்ளிவைக்கப்பட்டன.
"இதன் காரணமாக ஏற்பட்ட இடையூறுகளுக்கு மத்தியில் நமது வீரர்கள் கடுமையாகப் பயிற்சி எடுத்தார்கள். சில அர்ப்பணிப்பு
களைச் செய்தார்கள். அவர்கள் தங்களது படிப்புகளைத் தள்ளிவைத்ததும் அவற்றுள் அடங்கும்.
"தோக்கியோவில் சிறந்த திறன்களை வெளிப்படுத்த நமது தேசிய திடல்தட வீரர்களுக்கு எனது வாழ்த்துகள்.
"ஆயத்தநிலை தொடங்கி போட்டியில் பங்கேற்பது வரையில் எல்லாவற்றிலும் நீங்கள் சிறந்து விளங்க வேண்டும். கொடியை உயரப் பறக்கவிடுவதைத் தொடர வேண்டும்," என்று திரு லீ தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் வரும் ஜூலை 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. அதேபோல பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24 தொடங்கி செப்டம்பர் 5 வரை நீடிக்கும்.

