போர்ட்டோ: இன்றைய சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கான இங்கிலீஷ் ரசிகர்களின் வசதிக்காக கொவிட்-19 பாதுகாப்புக் கட்டுபாட்டு விதிமுறைகளை போர்ச்சுகல் தளர்த்தி உள்ளது.
மான்செஸ்டர் சிட்டியும் செல்சியும் மோத இருக்கும் இறுதி ஆட்டம் உலகக் காற்பந்து ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
வடமேற்கு போர்ச்சுகல் கடற்கரை நகரான போர்ட்டோவில் நடைபெறும் இந்த ஆட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும்
பொருட்டு நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.
பிரிட்டனில் இருந்தும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் வரும் சுற்றுப்பயணிகளுக்காக போர்ச்சுகல் தனது எல்லைகளை 10 நாட்களுக்கு முன்னரே திறந்துவிட்டது.
இது குறித்து போர்ட்டோ நகர காவல்துறை கண்காணிப்பாளர் கார்டோசோ டே சில்வா வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார்.
"எல்லைகள் திறந்திருக்கின்றன. நாடும் நகரமும் படிப்படியாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி எல்லைகளைத் திறந்து வருகின்றன. சுதந்திர நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு இல்லை என்பது சாத்தியமான அம்சங்களில் ஒன்று. குறிப்பாக காற்பந்து ரசிகர்களின் நடமாட்டத்திற்கு எவ்விதக் கட்டுப்பாடம் இல்லை," என்றார்.
இருப்பினும் இதில் மறுமதிப்பீடு இருக்கும் என்றும் கட்டுப்பாடு களில் இன்னும் சில திருத்தங் கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக வும் அவர் கூறினார்.
டிராகன் திடலில் நடைபெற உள்ள போட்டிக்கு உள்ளூர் அதிகாரிகளின் ஒப்புதலுடன் சுமார் 16,500 நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தத் திடலின் மொத்த பார்வையாளர்களில் மூன்றில் ஒரு பங்கு இது.
இரு காற்பந்து கிளப்புகளுக்கும் தலா 6,000 நுழைவுச்சீட்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. பொது மக்களுக்காக 1,700 நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. எஞ்சியவை ஐரோப்பிய காற்பந்து சங்க ஒன்றியத்துக்குத் தரப்பட்டு உள்ளன.

