கடந்த 2016ஆம் ஆண்டின் யூரோ காற்பந்து வெற்றியாளரான போர்ச்சுகல் அணி இம்முறை போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறியது.
பெல்ஜியம் அணியுடன் நேற்று அது மோதிய ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.
ஆட்டத்தின் வெற்றி கோலை பெல்ஜியம் மத்தியத்திடல் ஆட்டக்காரர் தொர்கன் ஹசார்ட் பெனால்ட்டி எல்லை வெளியேலிருந்து லாவகமாக புகுத்தினார்.
போர்ச்சுகலின் நம்பிக்கை நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ பலமுறை முயன்றும் கோல் எதுவும் போட முடியாமல் போட்டியில் மொத்தம் ஐந்து கோல்களுடன் முடித்துக்கொள்வதாயிற்று.
நேற்றைய ஆட்டத்தில் அவர் ஒரு கோலாவது அடித்திருந்தால் ஆக அதிகமான அனைத்துலக கோல்களை புகுத்திய மாபெரும் அங்கீகாரம் அவருக்கு கிடைத்திருக்கும்.
அடுத்து வரும் காலிறுதிச் சுற்றில் பெல்ஜியம் இத்தாலி குழுவைச் சந்திக்கும்.
மற்றொரு 'ரவுண்ட் ஆஃப் 16' ஆட்டத்தில், ஹாலந்து அணி செக் குடியரசு குழுவுடன் பொருதியது.
அதில் ஹாலந்து குழு அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று ஆட்டத்திற்கு முன் பரவலாக பேசப்பட்டது. ஆனால் அந்த அணியின் தற்காப்பு வீரர் மத்தாயாஸ் டிலிட் ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் சிவப்பு அட்டை பெற, திருப்புனை அங்கிருந்து தொடங்கியது.
செக் குடியரசு வீரர் தொமாஸ் ஹோல்ஸ் தலையால் முட்டி முதல் கோலை ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் போட்டார்.
இப்போட்டியின் சிறந்த தற்காப்பு ஆட்டக்காரர்களில் ஒருவராக கருதப்படும் பெட்ரிக் சிக் இரண்டாம் கோலை புகுத்தி ஹலாந்து குழுவை மூட்டை கட்டினார்.
காலிறுதிச் சுற்றில் செக் குடியரசு டென்மார்க் குழுவுடன் பொருதும்.

