தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யூரோ காற்பந்து: சுவிட்சர்லாந்திடம் பிரான்ஸ் அதிர்ச்சித் தோல்வி

2 mins read
ede251cf-03b5-4379-8fb8-a3e06dc841ee
ஆட்டத்தின் வெற்றியைக் கொண்டாடும் சுவிட்சர்லாந்து வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

காற்பந்து விளையாட்டின் உலகக் கிண்ண வெற்றியாளரான பிரான்ஸ் அணி, யூரோ 2020 காற்பந்துத் தொடரில் இருந்து வெளியேறியது.

யூரோ கிண்ணத்தை வெல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்திய சுற்றில் சுவிட்சர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது பிரான்ஸ்.

ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் பால் போக்பா ஒரு கோல் போட்டபோது 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தபோது அந்த அணி காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாகத்தான் இருந்தது.

ஆனால், ஆட்டம் முடிய பத்து நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது சுவிட்சர்லாந்து ஒரு கோல் போட்டவுடனேயே ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டது.

தொடர்ந்து சளைக்காமல் விளையாடிய சுவிட்சர்லாந்து 90வது நிமிடத்தில் மேலும் கோல் போட்டு ஆட்டத்தை 3-3 என்று சமன் செய்து பிரான்சிற்கு அதிர்ச்சி அளித்தது.

அதன் பிறகு கொடுக்கக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் போடாததால், பெனால்டி முறை நடத்தப்பட்டது.

அப்போது பிரெஞ்சு வீரர் கிலியன் எம்பாப்பே கோல் வலையை நோக்கி உதைத்த பந்தை, சுவிட்சர்லாந்தின் கோல் காப்பாளர் யான் சோமர் கோலாகாமல் தடுத்துவிட்டார்.

இதையடுத்து பெனால்டி வாய்ப்பில் 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சுவிட்சர்லாந்து காலிறுதிக்கு முன்னேறியது.

தொடரில் இருந்து வெளியேறியது குறிந்து பிரான்ஸ் அணிக்கு மிகவும் வருத்தமாக உள்ளது என்ற எம்பாப்பே, "பெனால்டி வாய்ப்பைத் தவற விட்டதற்காக வருந்துகிறேன். இதற்கு பிறகு என்னால் தூங்க முடியாது.

"ஆனால் துரதிர்ஷ்டவசமாக விளையாட்டின் இந்த ஏற்ற, தாழ்வுகள்தான் எனக்கு மிகவும் பிடிக்கும்." என்றார்.

குறிப்புச் சொற்கள்