யூரோ 2020: இன்னும் பெரிய சவால் காத்திருக்கிறது சுவிட்சர்லாந்துக்கு!

2 mins read
894f4a26-83c7-4cc8-9a0a-1b09b5139aa8
-

யூரோ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் வரலாற்றில் முதன்முறையாகக் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள சுவிட்சர்லாந்து, கிண்ணத்தை ஆக அதிக முறை வென்றுள்ள ஸ்பெயினைத் தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கவுள்ளது. ஸ்பெயின், ஜெர்மனி இரண்டும் கிண்ணத்தை மூன்று முறை வென்றுள்ளன.

உலகக் கிண்ண நடப்பு வெற்றியாளர் அணியான பிரான்ஸை இரண்டாம் சுற்றில் திக்குமுக்காடச் செய்தது சுவிட்சர்லாந்து. 2012 யூரோ கிண்ணத்தை வென்ற பிறகு சற்று களையிழந்துபோயிருந்த ஸ்பெயின், தற்போது புத்துயிர் பெற்றிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இரண்டாம் சுற்றில் ஸ்பெயினிடம் மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் ஒரு கட்டத்தில் பின்னணியிலிருந்த குரோவேஷியா, எதிர்பாரா வகையில் மீண்டுவந்து ஆட்டத்தைச் சமப்படுத்தியது. ஆனால் கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் மேலும் இரண்டு கோல்களைப் போட்டு அபார வெற்றி கண்டது.

குரோவேஷியா செய்யத் தவறியதைச் சென்ற யூரோ போட்டியில் இறுதியாட்டம் வரை சென்ற பிரான்ஸுக்கு எதிராகச் செய்தது சுவிட்சர்லாந்து; அதே கோல் வித்தியாசத்திலிருந்து மீண்டுவந்து பெனால்டிகளில் பிரான்சை வென்றது.

இரு அணிகளின் விளையாட்டாளர்களையும் அவர்களின் ஆற்றலையும் வைத்துப் பார்த்தால் வெற்றி ஸ்பெயினுக்குத்தான் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் சுவிட்சர்லாந்து உட்பட காலிறுதிச் சுற்றில் இடம்பெறும் எட்டில் நான்கு அணிகள் எதிர்பார்ப்புகளை முறியடித்துத்தான் போட்டியில் இவ்வளவு தூரம் வந்துள்ளன. அதே வேளையில், கடந்த இரண்டு ஆட்டங்களில் மொத்தம் 10 கோல்களைப் போட்டிருக்கும் ஸ்பெயினை வெளியேற்றுவது சாதாரணமன்று.

தற்காப்பு ஆட்டத்தில் மெத்தனமாக இருந்ததால் குரோவேஷியா, ஸ்பெயினுக்கு எதிராக அதிக கோல்களை விட்டுக்கொடுத்தது. அந்த அம்சத்தில் கவனமாக இருந்தால் சுவிட்சர்லாந்து ஆட்டத்தை வெல்ல வாய்ப்புள்ளது. நாளை நள்ளிரவு 12 மணிக்கு மோதவிருக்கின்றன, ஸ்பெயினும் குரோவேஷியாவும்.