இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையின் அசத்தல் கேட்ச்; சச்சின் பாராட்டு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையின் அசத்தல் கேட்ச்; சச்சின் பாராட்டு

2 mins read
e9e6a9c3-5a90-4f64-9ab7-edec58c6347e
பவுண்டரில் கோட்டில் பந்தை அசத்தலாக கேட்ச் செய்யும் ஹர்லீன் கோர் தியோல். படம்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 3

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற வீராங்கனை ஒருவர் பிடித்த கேட்சில், ஒட்டுமொத்த இந்திய மகளிர் கிரிக்கெட்டும் டிரெண்டாகி இருக்கிறது. கேட்ச் பிடித்தவரின் பெயர் ஹர்லீன் கோர் தியோல்.

இந்தியாவின் சண்டிகர் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இந்த 23 வயது வீராங்கனை, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பிடித்தார்.

இதுவரை ஒரு அனைத்துலக ஒருநாள் போட்டியிலும் 10 அனைத்துலக டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.

தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி நார்த்தாம்ப்டனில் நேற்று களமிறங்கியது. இந்திய அணியில் ஹர்லீனும் இடம்பெற்றிருந்தார்.

இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து பந்தடித்தது. ஆட்டத்தின் 19வது ஓவரில் ஷிக்கா பாண்டே வீசிய ஐந்தாவது பந்தை சிக்சர் நோக்கி விளாசினார் ஏமி ஜோன்ஸ்.

ஆனால், பவுண்டரி கோடு அருகே இருந்த ஹர்லீன், பந்தை தாவிப் பிடித்தார். பவுண்டரி கோட்டை பந்து கடந்துவிடும் எனத் தெரிந்தவுடன் பந்தை பவுண்டரி கோட்டைவிட்டு தாண்டவிடாமல் பவுண்டரி கோட்டிலிருந்து பாய்ந்து வந்து அசத்தலாக கேட்ச் பிடித்தார் ஹர்லீன்.

"இது ஓர் அருமையான கேட்ச். என்னைப் பொறுத்தவரை இந்த ஆண்டின் ஆகச் சிறந்த கேட்ச் இதுவே," என்ற பாராட்டு வாசகங்களோடு ஹர்லீனை 'டேக்' செய்து காணொளியோடு தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் இந்திய கிரிக்கெட் சகாப்தம் சச்சின் டெண்டுல்கர்.

இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு, இந்திய அணி முழுமையாக பந்தடிக்க முடியாமல் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் இங்கிலாந்து அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டம் இந்திய அணிக்குச் சாதகமாக அமையவில்லை என்றாலும், ஹர்லீன் பிடித்த கேட்ச் இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு பெருமையாக அமைந்திருக்கிறது.