செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

யூரோ இறுதியாட்டம்: விசாரணைக்கு கோரிக்கை

லண்டன்: யூரோ 2020 போட்டியின் இறுதியாட்டத்தைக் காண ரசிகர்கள் வெம்பிளி விளையாட்டரங்கிற்குள் அத்துமீறி நுழைந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் தொடர்பில் சுயேச்சையான விசாரணை நடத்துமாறு இங்கிலாந்து காற்பந்து சங்கம் உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டிஷ் நேரப்படி இம்மாதம் ஜூலை 11ஆம் தேதியன்று போட்டியின் இறுதியாட்டம் நடைபெற்றது. அதற்கு முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நுழைவுச் சீட்டுகளின்றி விளையாட்டரங்கிற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நுழைவுச்சீட்டு வைத்திருந்தவர்கள், வைத்திராதவர்கள் இரு தரப்பினரும் விளையாட்டரங்கிற்குள் மோதிக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

அரங்கிற்கு வெளியே ஆட்டத்தைக் காண சுமார் 200,000 பேர் திரண்டதாகவும் நம்பப்படுகிறது. வெம்பிளி அரங்கில் அதிகபட்சமாக 67,500 ரசிகர்கள் மட்டுமே இருக்கமுடியும். பலர் மது அருந்திவிட்டு வன்முறையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

பிரிட்டன், அயர்லந்து குடியரசு ஆகியவை இணைந்து 2030 உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்த விண்ணப்பித்துள்ளன. வெம்பிளி அரங்கில் நிகழ்ந்த சம்பவத்தால், அந்தப் பொறுப்பு அவ்விரு நாடுகளுக்கும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இனரீதியாகத் தூற்றப்பட்ட எஃப் 1 வீரர் லூவிஸ் ஹேமில்டன்

லண்டன்: பிரிட்டிஷ் எஃப் 1 கார் பந்தய வீரர் லூவிஸ் ஹேமில்டன் சமூக வலைத்தளங்களில் இன ரீதியாக சாடப்பட்டார். சர்ச்சைக்குரிய சூழலில் பிரிட்டிஷ் கிராண்ட் ப்ரி விருதை வென்ற அவருக்கு எதிராக இன்ஸ்டகிராமில் பதிவான பல கருத்துகளை அகற்றியதாக ஃபேஸ்புக் தெரிவித்தது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

வரலாறு காணாத வகையில் எட்டாவது முறையாக பிரிட்டிஷ் கிராண்ட் ப்ரி விருதை வென்றார் 36 வயது ஹேமில்டன். அதற்கு சில மணிநேரத்திற்குப் பிறகு அவருக்கு எதிராக இனரீதியான கருத்துகள் இணையத்தில் பதிவாயின. அண்மைக் காலமாக சில விளையாட்டு வீரர்கள் இனரீதியாக சாடப்பட்டுவருகின்றனர்.

யூரோ 2020 காற்பந்து போட்டியின் இறுதியாட்டம் நிறைவடைந்தவுடன் இங்கிலாந்து அணியின் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட், புக்காயோ சாக்கா, ஜேடன் சாஞ்சோ ஆகியோரும் இனரீதியாக சாடப்பட்டனர். இணையம்வழி மக்கள் சாடப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை முடுக்கிவிடுமாறு பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் சென்ற வாரம் சமூக வலைத்தள நிறுவனங்களை நேரில் சந்தித்துக் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்க ஒலிம்பிக் போட்டியாளருக்கு கொவிட்-19

தோக்கியோ: ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்கவுள்ள அமெரிக்காவின் பெண்கள் கட்டுடற்பயிற்சி குழுவில் ஒருவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

குழுவில் மற்றொருவர் அவருடன் தொடர்பில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளார். கிருமித்தொற்றுக்கு ஆளான கட்டுடற்பயிற்சி போட்டியாளருக்கு நோய் அறிகுறிகள் ஏதும் இல்லை.

கிருமித்தொற்றுக்கு ஆளானவர், அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு போட்டியாளர் இருவரும் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குழுவின் பயிற்சி முகாம் இன்ஸாய் நகரில் அமைந்திருந்தது. அங்குதான் கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டது.

அமெரிக்காவின் மற்ற கட்டுடற்பயிற்சி குழுவினர் தோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் விளையாட்டாளர் தங்குமிடத்திற்குச் சென்றுள்ளனர்.