தென்கொரிய மகளிர் ஆதிக்கம்

தென்கொரிய மகளிர் ஆதிக்கம்

2 mins read
83e55c93-a1e3-4769-9cb4-e203aa2561d5
தோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் சாதனையைப் படைத்த தென்கொரிய அம்பெய்தல் வீராங்கனை ஆன் சான். படம்: ராய்ட்டர்ஸ் -

தோக்­கியோ: ஒலிம்­பிக் அம்­பெய்­தல் போட்­டி­யில் நேற்று நடந்த தனி­ந­பர் தகு­திச் சுற்­றில் முதல் மூன்று இடங்­க­ளை­யும் தென்­கொரிய மக­ளிரே பிடித்­த­னர்.

ஆண்­கள் 64 பேர், பெண்­கள் 64 பேர் என மொத்­தம் 128 பேர் நேற்று தகு­திச் சுற்­றில் பங்­கேற்­ற­னர். அதி­க­பட்­சம் 720 புள்­ளி­க­ளைப் பெற முடி­யும் என்ற நிலை­யில், தாங்­கள் பெற்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் அவர்­கள் தரப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

பெண்­கள் பிரி­வில் 680 புள்­ளி­கள் என்ற புதிய சாத­னை­யு­டன் முத­லி­டம் பிடித்­தார் தென்­கொ­ரி­யா­வின் 20 வய­தான ஆன் சான். 1996ஆம் ஆண்டு அட்­லாண்­டா­வில் படைக்­கப்­பட்ட சாத­னை­யைத் தகர்த்த ஆன் சான், நடப்பு ஒலிம்­பிக்­கில் முதன்­மு­த­லில் சாத­னையை முறி­ய­டித்­த­வர் என்ற பெரு­மை­யைப் பெற்­றார்.

"என்­னால் முடிந்­த­ள­விற்­குச் சிறப்­பாக முயன்­றேன். அது நல்ல முடி­வைத் தந்­தது," என்­றார் ஆன்.

ஒலிம்­பிக் போட்­டி­களில் அம்­பெய்­தல் விளை­யாட்­டில் படைக்­கப்­பட்ட எல்­லாச் சாத­னை­க­ளுக்­கும் தென்­கொ­ரிய மக­ளிரே சொந்­தக்­கா­ரர்­கள். 1988ஆம் ஆண்­டி­லி­ருந்து குழு அள­வி­லான போட்­டி­களில் அவர்­களே தங்­கம் வென்று வந்­து உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், இம்­மு­றை­யும் அவர்­களே தங்­கத்­தைத் தட்­டிச் சென்­றால், ஒலிம்­பிக் போட்­டி­களில் ஒரு குறிப்­பிட்ட விளை­யாட்­டில் நீண்­ட­கா­ல­மா­கத் தங்­கத்­தைத் தக்­க­வைத்­துக்­கொண்­ட­வர்­கள் என்ற சாத­னையை அவர்­கள் படைப்­பர்.

முன்­ன­தாக, அம்­பெய்­த­லில் இந்­தி­யா­வின் நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மா­கக் கரு­தப்­படும் தீபிகா குமாரி தகு­திச் சுற்­றில் 663 புள்­ளி­க­ளைப் பெற்று ஒன்­ப­தாம் இடத்­தையே பிடித்­தார். அது­போல, ஆண்­கள் பிரி­வி­லும் பிர­வீண் ஜாதவ், அத்­தனு தாஸ், தருண்­தீப் ராய் ஆகி­யோர் முறையே 656, 653, 652 புள்­ளி­க­ளைப் பெற்று ஏமாற்­ற­ம் அளித்­த­னர்.

மயங்கி விழுந்த ரஷ்ய வீராங்­கனை

இதற்­கி­டையே, அம்­பெய்­தல் தகு­திச் சுற்­றின்­போது வெப்­பம் தாங்­கா­மல் ஸ்வெட்­லானா கோம்­போவா என்ற ரஷ்ய வீராங்­கனை மயங்­கிச் சரிந்­தார். இதை­ய­டுத்து, சூட்­டைக் குறைக்­கும் வித­மாக உட­ன­டி­யாக அவ­ரது தலை­யில் பனிக்­கட்­டிப்பை வைக்­கப்­பட்டு, முத­லு­தவி அளிக்­கப்­பட்­டது.

கோம்­போவா உடல்­நிலை தேறி வரு­வ­தா­க­வும் போட்­டி­களில் அவர் விரை­வில் பங்­கேற்­பார் என்­றும் சக ரஷ்ய வீராங்­க­னை­யான செனியா பெரோவா தெரி­வித்­தார்.

வெப்­ப­நிலை 33 டிகிரி செல்­சி­யஸ்­வரை செல்­ல­லாம் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட நிலை­யில், பயிற்­று­நர்­களும் பணி­யா­ளர்­களும் நிழல் தேடி மரங்­க­ளைத் தஞ்­ச­ம­டைந்­த­தைக் காண முடிந்­தது.