செய்திக்கொத்து

2 mins read

பரிசுப்பணம் இந்தியாவில்தான் அதிகம்

புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய விளையாட்டாளர்கள் தங்கம் வென்றால் உலகிலேயே அவர்களுக்குத்தான் அதிகமான பரிசுப்பணம் கிடைக்கும். அந்நாட்டின் உத்தரப் பிரதேசம், அரியானா, ஒடிசா, சண்டிகர், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் தங்கம் வெல்வோர்க்கு

ரூ.6 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளன. வெள்ளி, வெண்கலம் வெல்வோர்க்கு முறையே ரூ.4 கோடியும் ரூ.2.5 கோடியும் கிடைக்கும். அத்துடன், மத்திய அரசும் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வெல்வோர்க்கு முறையே ரூ.75 லட்சம், ரூ.50 லட்சம், ரூ.30 லட்சம் வழங்கப் படும் என அறிவித்துள்ளது. இந்தப் பரிசுத்தொகை உலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிகம் எனக் கூறப்படுகிறது.

நெதர்லாந்து பயிற்றுநராக வேன் ஹால்

ஆம்ஸ்டர்டாம்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் முன்னாள் நிர்வாகியான லூயி வேன் ஹால், 69, நெதர்லாந்து குழுவின் பயிற்றுநராக மூன்றாம் முறையாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு வரும் நாள்களில் வெளியாகக்கூடும் என்று சிஎன்என் செய்தி தெரிவிக்கிறது. அண்மையில் நடந்த யூரோ காற்பந்துக் கிண்ணப் போட்டிகளில் நெதர்லாந்துக் குழு காலிறுதிக்கு முந்திய சுற்றில் செக் குடியரசிடம் வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஃபிராங்க் டி போர் நெதர்லாந்துப் பயிற்றுநர் பொறுப்பிலிருந்து விலகினார்.

கொவிட்-19: கிரிக்கெட் போட்டி ரத்து

பார்பேடோஸ்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில், வீரரல்லாத ஒருவர்க்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நடக்கவிருந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அனைத்துலக கிரிக்கெட் மன்றம் தெரிவித்தது. போட்டி எப்போது நடைபெறும் என்பது பின்னர் முடிவுசெய்யப்படும் எனக் கூறப்பட்டது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 133 ஓட்டங்களில் வெற்றிபெற்றது.