செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

இந்தியாவைத் திக்குமுக்காட வைத்த ஆஸ்திரேலியா

தோக்கியோ: ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆண்கள் ஹாக்கியின் ஏ பிரிவு ஆட்டத்தில் இந்தியாவை 7-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அபாரமாக ஆடியது உலக ஹாக்கி தரவரிசையில் முதலிடத்தை வகிக்கும் ஆஸ்திரேலியா.

ஒரு காலத்தில் ஹாக்கியில் அசத்திய இந்திய அணி, அண்மைக் காலமாக அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

கடைசியாக 1980ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஹாக்கி போட்டியில் தங்கம் வென்றது இந்தியா.

மேலும் மூவாண்டுக்கு சொல்ஷியா

மான்செஸ்டர்: மேலும் மூவாண்டுகளுக்கு மான்செஸ்டர் யுனைட்டெட் காற்பந்து அணியின் பயிற்றுவிப்பாளராக இருப்பதற்கான ஒப்பந்தத்தில் ஒலே குனார் சொல்ஷியா கையெழுத்திட்டுள்ளார்.

அணியின் வரலாற்றில் ஆகச் சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் சொல்ஷியா, 2018ஆம் ஆண்டிலிருந்து அதன் பயிற்றுவிப்பாளராக இருந்து வருகிறார். பிரச்சினையில் மூழ்கிக் கிடந்த அணியை நன்கு மீட்டெடுத்து தற்போது அதை ஒரு நல்ல நிலையில் வைத்துள்ளார்.

இருந்தாலும் சொல்ஷியா பதவியில் இருந்த கடந்த மூவாண்டுகளில் மான்செஸ்டர் யுனைட்டெட் கிண்ணம் ஏதும் வெல்லாதது காற்பந்து விமர்சகர்கள் உள்ளிட்ட சில தரப்பினரிடையே ஒரு குறையாக இருந்து வருகிறது.படிப்படியாக அணியை மேம்படுத்திய சொல்ஷியாவிற்குப் போதுமான கால அவகாசம் வழங்கினால் விரைவில் கிண்ணங்களையும் கைப்பற்றுவார் என்ற கருத்தும் சிலரிடையே உள்ளது.

13 ஆண்டுகளில் ஆக இளைய ஏடிபி போட்டியாளர் அல்காரெஸ்

உமாக் (குரோவேஷியா): ஸ்பெயினின் கார்லொஸ் அல்காரெஸ், 13 ஆண்டுகளில் ஏடிபி டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்ற ஆக இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

அரையிறுதியாட்டத்தில் தனது நாட்டவரான ஏல்பர்ட் ராமொஸ்-வினோலாஸை வென்ற அல்காரெஸ், இறுதியாட்டத்தில் பிரான்சின் ரிச்சர்ட் காஸ்கெயைச் சந்திப்பார்.

இரண்டு விளையாட்டாளர்களுக்கும் இடையே 17 வயது வித்தியாசம்.