செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

முதன்முறையாக ஒலிம்பிக்கில் பிலிப்பீன்சுக்குத் தங்கம்

தோக்கியோ: ஒலிம்பிக் விளையாட்டுகளின் வரலாற்றில் பிலிப்பீன்ஸ் முதன்முறையாகத் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. எடை தூக்கும் போட்டியில் அந்நாட்டின் ஹிடிலின் டியாஸ் தங்கத்தைக் கைப்பற்றினார்.

பெண்கள் எடை தூக்கும் போட்டியின் 55 கிலோகிராம் பிரிவில் 30 வயது டியாஸ் வெற்றி கண்டார். உலகச் சாதனை படைத்திருந்த சீனாவின் லியாவ் சியூயுன்னைப் பின்னுக்குத் தள்ளினார் டியாஸ்.

ஒலிம்பிக் விளையாட்டுகளின் வரலாற்றில் பெர்முடாவும் முதன்முறையாகத் தங்கம் வென்றது. ஒலிம்பிக் வரலாற்றில் தங்கம் வென்றுள்ள ஆகச் சிறிய நாடு இது. அதன் 33 வயது ஃபுளோரா டஃபி மூவகைப் போட்டியில் தங்கம் வென்றார்.

ஒலிம்பிக் மேசைப்பந்து வரலாற்றில் ஜப்பானுக்கு முதல் தங்கம்

தோக்கியோ: மேசைப்பந்து கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஜப்பான் தங்கத்தை கைப்பற்றியுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் மேசைப்பந்தில் ஜப்பான் வென்றுள்ள முதல் தங்கப் பதக்கம் இது.

ஒலிம்பிக் விளையாட்டுகளின் அனைத்து மேசைப்பந்து போட்டிகளிலும் சீனாதான் கடந்த 17 ஆண்டுகளாகத் தங்கத்தை வென்று வந்தது. இம்முறை அந்நாட்டின் சூ சியு, லியூ ஷின்வென் ஆகியோர் ஜப்பானின் ஜுன் மிஸுடானி, மிமா இட்டோ ஆகியோரிடம் தோல்வியுற்றனர்.

5-11, 7-11, 11-8, 11-9, 11-9, 6-11, 11-6 என்ற ஆட்டக்கணக்கில் இறுதியாட்டத்தை வென்றனர் ஜுன் மிஸுடானி, மிமா இட்டோ அணி.

குவா செங் வென் வெளியேறினார்

தோக்கியோ: 200 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் பங்கேற்கத் தவறினார் சிங்கப்பூர் வீரர் குவா செங் வென்.

நேற்று முன்தினம் நடைபெற்ற தகுதிச் சுற்றில் அவர் எடுத்துக்கொண்ட நேரம் 1 நிமிடம் 56.42 வினாடி.

சென்ற ஒலிம்பிக் விளையாட்டுகளின் தகுதிச் சுற்றில் அவர் எடுத்துக்கொண்ட நேரம் 1 நிமிடம் 56.01 வினாடி. அதுவே அவர் இதுவரை ஆகக் குறைவாக எடுத்துக்கொண்ட நேரம்.

இந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் இதுவரை தான் சரியாகச் செய்யாததற்கு தானே பொறுப்பு என்று அவர் சொன்னார்.