தோக்கியோ: ஆண்கள் ஹாக்கியின் ஏ பிரிவு ஆட்டத்தில் ஸ்பெயினை 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது இந்தியா. வெற்றியின் மூலம் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பு இந்திய அணிக்கு அதிகரித்துள்ளது.
சென்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 7-1 எனும் கோல் கணக்கில் படுதோல்வி கண்ட இந்தியா இம்முறை மனந்தளராமல் ஆடியது.
ஆண்கள் ஹாக்கியின் உலகத் தரவரிசையில் நான்காம் இடத்தில் உள்ள இந்தியா, போட்டியில் அதன் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை 3-2 எனும் கோல் கணக்கில் வென்றது.
ஒன்பதாவது இடத்தை வகிக்கும் ஸ்பெயின், போட்டியில் இதுவரை ஆடிய மூன்று ஆட்டங்களிலும் வெல்லவில்லை. முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினாவுடன் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது, அதற்குப் பிறகு நியூசிலாந்திடம் 4-3 எனும் கோல் கணக்கில் தோல்வியுற்றது.
ஆண்கள் ஹாக்கியில் ஒலிம்பிக் நடப்பு வெற்றியாளரான அர்ஜென்டினாவுடன் அடுத்த ஆட்டத்தில் இந்தியா மோதுகிறது. கடைசியாக 1980 ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.
ஹாக்கியில் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக விளங்கிய இந்தியா அண்மைக் காலமாக சற்று சிரமப்பட்டு வருகிறது.