தோக்கியோ: ஆஸ்திரேலிய நீர்ச்சறுக்கல் வீரர் ஓவன் ரைட் முதன்முறையாக ஒலிம்பிக் விளையாட்டுகளில் பதக்கம் வென்றுள்ளார்.
2015ஆம் ஆண்டில் பெரிய அலையில் சிக்கிக்கொண்டதால் அவரது மூளையில் காயம்பட்டு ரத்தக் கசிவு ஏற்பட்டது.
அந்த சம்பவத்திற்குப் பிறகு நீர்ச்சறுக்குவதற்கு மட்டுமின்றி சாதாரணமாக நடப்பதற்கும் அவர் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
இப்போது 31 வயதாகும் அவர், ஒலிம்பிக் நீர்ச்சறுக்கு போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ரைட், 11.97 புள்ளிகளைப் பெற்று உலக நீர்ச்சறுக்கு போட்டியை இரண்டு முறை வென்றுள்ள பிரேசிலின் கேப்ரியல் மெடினாவைப் பின்னுக்குத் தள்ளினார்.
ஒலிம்பிக் விளையாட்டுகளில் முதன்முறையாக நடைபெறும் நீர்ச்சறுக்கில் தங்கத்தைக் கைப்பற்றினார் பிரேசிலின் இட்டாலோ ஃபெரேரா.
இறுதியாட்டத்தில் 15.14 புள்ளிகளுடன் ஜப்பானின் கனோவா இகாராஷியை வென்றார் ஃபெரேரா.
ஒலிம்பிக் விளையாட்டுகளின் நீர்ச்சறுக்கு போட்டியில் வீரர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வோர் அலைக்கும் ஐந்து நீதிபதிகள் ஒன்றிலிருந்து பத்து வரை புள்ளிகளை வழங்குவர். பின்னர் ஆகக் குறைவான, ஆக அதிகமான புள்ளிகள் அகற்றப்படும்.
எஞ்சிய மூன்றைக் கொண்டு வெற்றியாளர்கள் நிர்ணயிக்கப்படுவர்.

