தோக்கியோ: சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை குவா டின் வெங் 100 மீட்டர் எதேச்சைபாணி பிரிவின் அரையிறுதிக்கு முன்னேறத் தவறினார். மொத்தம் எண்மர் கலந்துகொண்ட 4வது தகுதிச்சுற்றில் டின் கடைசியாக வந்தார். நூறு மீட்டர் தொலைவை நீந்த அவர் 56.36 வினாடிகளை எடுத்துக்கொண்டார். 2019 தேசிய வெற்றியாளர் போட்டிகளில் அவர் 54.62 வினாடிகளில் நூறு மீட்டரை நீந்திக் கடந்திருந்தார். நாளை காலை நடக்கவிருக்கும் 50 மீ. எதேச்சைபாணி நீச்சலிலும் டின் பங்கேற்கவிருக்கிறார்.
தங்கத்திற்குக் குறிவைக்கும் ஸ்கூலிங்
ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு முதன்முறையாகத் தங்கம் வென்று தந்த ஜோசப் ஸ்கூலிங், 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் தங்கத்தைத் தக்கவைக்கும் முனைப்புடன் உள்ளார். இன்றிரவு 6.54 மணிவாக்கில் இடம்பெறும் ஐந்தாவது தகுதிச்சுற்றில் ஸ்கூலிங் போட்டியிடுகிறார். அரையிறுதிச் சுற்று நாளையும் இறுதிப்போட்டி நாளை மறுநாளும் இடம்பெறும்.

