பூப்பந்தில் சறுக்கல்
பூப்பந்து விளையாட்டில் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் 18ஆம் நிலையில் இருக்கும் ஜெர்மனியின் கிம் கா இயூனிடம் 21-13, 21-14 என்ற நேர் செட்களில் தோற்று, காலிறுதிக்கு முந்திய சுற்று வாய்ப்பை இழந்தார் சிங்கப்பூரின் இயோ ஜியா மின். இந்த ஆட்டம்
30 நிமிடங்களில் முடிவிற்கு வந்தது.
'ஹாட்ரிக்' தோல்வி
தொடர்ந்து 3வது போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வியடைந்தது. முதலிரு ஆட்டங்களில் நெதர்லாந்து, ஜெர்மனி அணிகளிடம் தோற்றுப்போன இந்தியா, பிரிட்டனிடம் நேற்று 4-1 என்ற கோல் கணக்கில் அடிவாங்கியது. அடுத்ததாக, நாளை அயர் லாந்துடனும் நாளை மறுநாள் தென்னாப்பிரிக்காவுடனும் இந்திய அணி மோதவுள்ளது.
சிந்து வெற்றிமுகம்
சென்ற ஒலிம்பிக்கில் இறுதி வரை முன்னேறியும் தங்கப் பதக்கத்தைக் கோட்டைவிட்ட பூப்பந்து வீராங்கனை சிந்து, இம்முறை தங்கம் வென்று தருவார் என இந்தியர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதற்கேற்ப, பிரிவுச் சுற்றில் வென்று, 'நாக் அவுட்' சுற்றுக்கு முன்னேறியுள்ளார் சிந்து. நேற்று நடந்த ஆட்டத்தில் 21-9, 21-16 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் யி சியூங்கை அவர் தோற்கடித்தார்.
ரக்பி: தங்கத்தைத் தக்கவைத்த ஃபிஜி
குட்டித் தீவாக இருப்பினும் ஒலிம்பிக் போட்டிகளில் 'ரக்பி செவன்ஸ்' விளையாட்டில் ஃபிஜியின் ஆதிக்கம் தொடர்கிறது. நேற்று மாலை நடந்த இறுதிப் போட்டியில் ஃபிஜி, வலிமைமிக்க நியூசிலாந்தை 27-12 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து, தங்கத்தைத் தக்கவைத்துக்கொண்டது. தொடக்கம் முதலே ஆட்டம் ஃபிஜியின் பிடியில் இருந்தது. வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் அர்ஜெண்டினா 17-12 என்ற புள்ளிக் கணக்கில் பிரிட்டனை வீழ்த்தியது.

