செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் வீரர் தோல்வி

தோக்கியோ: ஆண்கள் பூப்பந்து உலகத் தரவரிசையில் முதலிடத்தை வகிக்கும் ஜப்பானின் கென்டோ மொமோட்டா, ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்கள் ஒற்றையர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

எதிர்பாராத வகையில் தரவரிசையில் இடம்பெறாத தென்கொரியாவின் ஹியோ குவாங்-ஹீ 21-15, 21-19 எனும் ஆட்டக்கணக்கில் வெற்றிகண்டார். வாகன விபத்தில் சிக்கிய மொமோட்டா, அது உட்பட பல சவால்களைக் கடந்து ஒலிம்பிக்கில் பங்கேற்றார். ஆனால், இரண்டே ஆட்டங்களில் தங்கம் வெல்லும் அவரது கனவு கலைந்தது.

சிங்கப்பூரின் பூப்பந்து வீரர் லோ கியேன் யூவும் ஆண்கள் ஒற்றையர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

உலகத் தரவரிசையில் ஏழாவது இடத்திலுள்ள இந்தோனீசியாவின் ஜானத்தன் கிரிஸ்டீயிடம் 22-10, 13-21, 21-18 எனும் ஆட்டக்கணக்கில் தோல்வியுற்றார் லோ.

கிருமித்தொற்றால் அனைத்துலக விருது வெற்றியாளர் வெளியேற்றம்

தோக்கியோ: கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதால் அமெரிக்காவின் ஆண்கள் கழியூன்றி உயரம் தாண்டும் வீரர் சேம் கெண்ட்ரிக்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளிலிருந்து வெளியேறியுள்ளார்.

கழியூன்றி உயரம் தாண்டும் போட்டியில் இரண்டு முறை அனைத்துலக விருதை வென்றவர் கெண்ட்ரிக்ஸ்.

பிரேசிலில் நடைபெற்ற சென்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

அர்ஜென்டினாவின் ஜெர்மான் சியாராவிக்லியோவும் கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாகக் கழியூன்றி உயரம் தாண்டும் போட்டியிலிருந்து வெளியேறினார்.

காற்பந்தில் $6 பில்லியன் இழப்பு

லண்டன்: கொவிட்-19 கிருமித்தொற்றின் தாக்கத்தால் ஐரோப்பிய காற்பந்தின் வருவாய் 3.4 பில்லியன் பவுண்ட்ஸ்($6 பில்லியன்) குறைந்துள்ளதாக நிதி நிறுவனமான டிலோய்ட் தெரிவித்துள்ளது. கிருமிப் பரவல் சூழலால் சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் ஐரோப்பிய நாடுகளில் காற்பந்து ஆட்டங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.

அதன் பிறகு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் காற்பந்து ஆட்டங்கள் விளையாட்டரங்குகளில் ரசிகர்களின்றி நடத்தப்பட்டன. பல மாதங்களுக்கு ஆட்டங்கள் அவ்வாறே நடைபெற்றன.

பிரபல அணிகள் உட்பட பல காற்பந்துக் குழுக்கள் இதனால் நிதி ரீதியாகப் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிட்டது.