வெற்றியின்போதும் தோல்வியின்போதும் ஆதரவு தரும்படி சிங்கப்பூரர்களுக்கு அதிபர், பிரமுகர்கள் வலியுறுத்து
சிங்கப்பூர்: ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்களின் முயற்சிகளையும் அர்ப்பணிப்பு உணர்வையும் அதிபர் ஹலிமா யாக்கோப்பும் இதர பிரமுகர்களும் பாராட்டினர்.
வெற்றியிலும் தோல்வியிலும் வீரர்களை ஆதரிக்கும்படி சிங்கப்பூரர்களை அவர்கள் வலியுறுத்தினர். ஒருவர் மற்றொருவரை இரக்கமற்ற முறையில் நோக்குவதைப் பற்றி அதிபர் ஹலிமா நேற்று ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.
"நம்முடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்போது ஒருவரை ஓஹோ என்று புகழ்கிறோம். ஆனால் எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது அவர்களை அதளபாதாளத்தில் தள்ளிவிடுகிறோம்," என்று அதிபர் குறிப்பிட்டார்.
"நாம் தோல்வியுறும்போது நாமும் மனிதப் பிறவிதானே, தோல்வி வழமையானதுதான் என்று சமாதானம் சொல்கிறோம். ஆனால் இதில் நாம் நம்மைப் போலவே மற்றவர்களை நினைப்பதில்லை," என்று அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் நீச்சல் வீரர் ஸ்கூலிங், 26, ஒலிம்பிக் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி அரையிறுதி நீச்சல் போட்டிக்குத் தகுதி பெறவில்லை.
"இப்போது இவருக்கு எதிராக கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். ஆனால் இவர் முன்பு நமக்குத் தங்கம் பெற்றுத் தந்ததை மறந்துவிடுகிறோம்," என்று குறிப்பிட்ட அதிபர், நம் வீரர்கள் எடுக்கும் முயற்சிகளை, அர்ப்பணிப்பு உணர்வை நாம் பாராட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டி என்பது ஜாலியாக பூங்காவில் நடந்துபோவதில்லை. உலகிலேயே தலைசிறந்த வீரர்களுடன் போட்டிபோட்டு வெற்றிபெற வேண்டும் என்பதை அதிபர் சுட்டினார்.
"நம் வீரர்களை நாம் பாராட்டத்தான் வேண்டும். அவர்களுக்குத் தொடர்ந்து நாம் ஆதரவு தர வேண்டும்," என்று அதிபர் வலியுறுத்தினார். இன்னமும் பலர் நம் வீரர்களைப் பாராட்டுவதைச் சுட்டிய அதிபர் அவர்களுக்கு நன்றி கூறினார்.
ஜப்பான் சென்றுள்ள கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங், சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றத் தலைவர் டான் சுவான் ஜின் ஆகியோரும் ஃபேஸ்புக்கில் இதையே வலி யுறுத்தினர்.

