தோக்கியோ: ஒலிம்பிக் விளையாட்டுகளின் பெண்கள் 'ஃபெதர்வெய்ட்' பிரிவு குத்துச்சண்டை போட்டியில் ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாகத் தங்கம் வென்றுள்ளது ஜப்பான். நீதிபதிகளின் ஒருமித்த முடிவால் பிலிப்பீன்சின் நெஸ்தி பெட்டெச்சியோவை வென்றார் ஜப்பானின் சினா ஐரி.பெட்டெச்சியோதான் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
விளையாட்டாளர் ஆவதற்கு ஒருவருக்கு இயல்பாகவே ஆற்றல் இருக்கவேண்டும் என்ற ஒரு கருத்து உண்டு.
அது தன்னிடம் இல்லை எனச் சொல்லும் ஐரி, விளையாட்டுகளில் சிறந்து விளங்கத் தங்களிடம் தகுதி இல்லை என்றெண்ணுவோரைத் தனது வெற்றி ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்.
விட்டுக்கொடுக்காமல் முயற்சி செய்தால், விளையாட்டுகளில் தேர்ச்சி பெறத் தேவையான உடல் கட்டு இல்லை என்றெண்ணும் சிறுவர்களும் சாதிக்கலாம் என்பதற்குத் தன்னால் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கமுடியும் என்றார் ஐரி. இந்தப் போட்டியில் பெட்டெச்சியோ வென்ற வெள்ளிப் பதக்கம், பெண்கள் குத்துச்சண்டையில் பிலிப்பீன்ஸ் வென்றுள்ள முதல் பதக்கம்.

