தோக்கியோ: ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆண்கள் காற்பந்துப் போட்டியின் அரையிறுதியாட்டத்தில் பெனால்டிகளில் மெக்சிக்கோவை 4-1 எனும் கோல் கணக்கில் வென்றது பிரேசில். ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்ததால் பெனால்டிகளின் மூலம் வெற்றியாளர் அணி நிர்ணயிக்கப்பட்டது. ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக ஆண்கள் காற்பந்தில் தங்கம் வென்றிருந்த பிரேசில், இப்போது தொடர்ந்து இரண்டாவது முறையாகப் போட்டியை வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
உலகக் கிண்ணத்தை ஆக அதிக முறை வென்றுள்ளது பிரேசில். ஆனால் ஒலிம்பிக் விளையாட்டுகளில் அணி அவ்வளவு சிறப்பாகச் செய்யாதிருந்தது.
இம்முறை தங்கப் பதக்கத்தை வென்றால் அந்த நிலை மாறிவிடும்.
காற்பந்தில் தலைசிறந்த அணியாகக் கருதப்பட்டு வந்த பிரேசில், கடந்த சுமார் 15 ஆண்டுகளாகக் களையிழந்து போயிருக்கிறது. உலகக் கிண்ணப் போட்டிகளிலும் அணி சரியாக ஆடவில்லை.
எனினும் எந்நேரமும் மீண்டுவந்து மறுபடியும் உலகக் காற்பந்தைத் தன்வசப்படுத்தும் ஆற்றல் கொண்ட அணி பிரேசில்.

