தோக்கியோ: பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஏமாற்றங்களைச் சந்தித்து வந்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நேற்று கொண்டாட்டத்தில் மூழ்கியது.
கிட்டத்தட்ட 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் அது பதக்கம் வென்றது.
அரையிறுதியில் பெல்ஜியத்திடம் இந்தியா 5-2 எனும் கோல் கணக்கில் தோல்வி அடைந்ததும் இம்முறையும் வெறுங்கையுடன் நாடு திரும்ப வேண்டிவரும் என அஞ்சப்பட்டது.
ஆனால், மூன்றாவது இடத்தை நிர்ணயிக்க ஜெர்மனிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 5-4 எனும் கோல் கணக்கில் இந்தியா வாகை சூடி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
இந்திய ஹாக்கி அணி அதன் ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை எட்டு பதக்கங்களை வென்றுள்ளது.
இதற்கு முன்பு ஆகக் கடைசியாக 1980ஆம் ஆண்டு ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அது தங்கம் வென்றது.
அந்த ஆட்டத்தில் 4-3 எனும் கோல் கணக்கில் ஸ்பெயினை இந்தியா வீழ்த்தியது.
நேற்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற அதன் கோல்காப்பாளர் ஸ்ரீீஜேஷ் பரட்டு ரவீந்திரன் முக்கிய காரணமாக இருந்தார்.
கோல் போட ஜெர்மனிக்குக் கிடைத்த ஏறத்தாழ ஒன்பது பொன்னான வாய்ப்புகளை அவர் தடுத்து நிறுத்தினார். ஆட்டம் முடிய சில நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில், ஜெர்மனி தனது கோல் வேட்டையைத் தீவிரப்படுத்தியது.
ஆனால் கொஞ்சம்கூட அசராமல் நின்ற ஸ்ரீஜேஷ் ஜெர்மன் வீரர்
களின் முயற்சிகளை முறியடித்தார்.
"இது இந்திய ஹாக்கிக்குக் கிடைத்துள்ள மறுபிறவி. 1980ல் தங்கப் பதக்கம் வென்றதோடு சரி. அதையடுத்து, ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்கவே இல்லை. இன்று பதக்கம் வென்றுவிட்டோம். இது இந்திய ஹாக்கிக்குப் புத்துணர்ச்சி யைத் தந்துள்ளது.
இனி அதிகமான இந்திய இளையர்கள் ஹாக்கி விளையாடுவார்கள். ஆட்டத்தின் கடைசிக்
கட்டத்தில் ஜெர்மனிக்குப் பல பெனால்டி கார்னர்கள் கிடைத்தன. இந்தியா எப்படியாவது ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது எனது 21 ஆண்டுக் கனவு. அதற்காக நான் கடுமையாக உழைத்துள்ளேன்.
"இதை மனதில் கொண்டு ஜெர்மனி வீரர்கள் என்னை நோக்கிப் பறக்கவிட்ட அனைத்துப் பந்துகளையும் தடுத்து நிறுத்தினேன்," என்று ஸ்ரீஜேஷ் பெருமிதத்துடன் தெரிவித்தார். இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை பெனால்டி ஷுட் அவுட்டில் 3-2 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் முதல்முறையாக தங்கம் வென்றது.

