தோக்கியோ: ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 4X100 அஞ்சல் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்கா 1920லிருந்து 2000ஆம் ஆண்டு வரை பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தது.
அண்மையில் அது சில பின்னடைவுகளைச் சந்தித்தது. ஆனால் இம்முறை அது மீண்டும் தடம் பதிக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்றைய அரையிறுதி முடிவுகள் விளையாட்டு உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டாம் அரையிறுதிப் பந்தயத்தில் களமிறங்கிய அமெரிக்க அணியால் ஆறாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.
இதனால் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை அது இழந்தது.
அந்தப் பந்தயத்தில் யாரும் எதிர்பாராத வகையில் சீனா வெற்றி பெற்றது. இரண்டாவது இடத்தில் கனடாவும் மூன்றாவது இடத்தில் இத்தாலியும் பந்தயத்தை முடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நான்காவது இடத்தில் வந்த ஜெர்மனியும் ஐந்தாவது இடத்தில் பந்தயத்தை முடித்த கானாவும் இறுதிச் சுற்றில் போட்டியிடும்.
இதற்கிடையே, இறுதிச் சுற்றுக்கு அமெரிக்கா தகுதி பெறாதது தொடர்பாக அமெரிக்கா வின் முன்னாள் ஓட்டப்பந்தய நட்சத்திர வீரர் கார்ல் லூயிஸ் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
இத்தோல்வி கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அவமானம் என்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் அவர் கடும் அதிருப்தி தெரிவித்தார்.

