விருதுகளை வெல்ல துடிக்கும் மான்செஸ்டர் யுனைடெட்

விருதுகளை வெல்ல துடிக்கும் மான்செஸ்டர் யுனைடெட்

2 mins read
eeffe5d7-a93b-44e0-8eb3-a2c7398295b6
இன்றைய ஆட்டத்தில் மத்திய திடலைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் புருனோ ஃபெர்னான்டசும் (இடது) லீட்ஸ் யுனைடெட் குழுவின் கெல்வின் ஃபிலிப்சும் போராடுவர் என்று எதிர்பார்க்கலாம். படம்: யோக்‌ஷயர் ஈவ்னிங் போஸ்ட் -

கொவிட்-19 நிலைமைக்குப் பிறகு அரங்கம் நிறைந்த ரசிகர்களுடன் ஆட்டங்கள் தொடக்கம்

மான்செஸ்டர்: ஒலே குணார் சொல்க்சியாரின் மான்செஸ்டர் யுனைடெட் குழு இந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தின் தனது முதலாவது ஆட்டத்தில் மார்சிலோ பியல்சாவின் லீட்ஸ் யுனைடெட் குழுவை சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்குச் சந்திக்கஇருக்கிறது.

கடந்த பருவத்தில் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது மேன்யூ. லீட்ஸோ 38 ஆட்டங்களில் 59 புள்ளிகள் பெற்று பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.

இந்தப் பருவத்துக்காக மேன்யூ, ஜேடன் சாஞ்சோ மற்றும் ரஃபாயல் வரேன் இருவரையும் ஒப்பந்தம் செய்தது அதன் பலத்தை அதிகப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

கடந்த பருவத்தில் எந்தவொரு விருதையும் பெறாத மேன்யூ, இந்த ஆண்டு அந்தக் குறையைத் தீர்த்துக்கொள்ள போராடும்.

மேன்யூவைப் போல பிரிமியர் லீக்கில் இடம்பெற்றுள்ள நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி, செல்சி, லிவர்பூல், டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்ஸ், ஆர்சன்ல், லெஸ்டர் சிட்டி போன்ற குழுக்களும் ஒன்றுக்கு ஒன்று கடும் போட்டியைக் கொடுக்கும் என்பது நிச்சயம்.

லீட்சைப் பொறுத்தவரை, ஜூனியர் ஃபிர்போ, கிறிஸ்டஃபர் கிளேசன், ஜேக் ஹாரிசன் ஆகிய ஆட்டக்காரர்களை ஒப்பந்தம் செய்திருப்பது, அதற்கு பலத்தைக் கொடுக்கும்.

இன்று நடைபெறும் மற்ற ஆட்டங்களைப் பார்ப்போம். பெர்ன்லி, பிரைட்டன் & ஹோவ் ஆல்பியனைச் சந்திக்கும். அண்மையில் ஐரோப்பிய சூப்பர் கிண்ணத்தை வென்ற செல்சி, கிரிஸ்டல் பேலஸ் குழுவுடன் பொருதும்.

எவர்ட்டன், சௌதேம்டன் குழுவைச் சந்திக்கும். லெஸ்டர் சிட்டி, வூல்வ்ஸ் குழுவுடன் மோதும்.

வாட்ஃபர்ட், ஆஸ்டன் வில்லா குழுவைச் சந்திக்கும். நார்விச் சிட்டி, லிவர்பூல் குழுவுடன் பொருதும்.

எது எப்படி இருப்பினும், ஒரு விறுவிறுப்பான, திருப்பங்கள் நிறைந்த இங்கிலிஷ் காற்பந்துப் பருவத்தை எதிர்பார்க்கலாம்.