கிரிக்கெட்: சிறப்பாக தொடங்கிய இந்தியா

கிரிக்கெட்: சிறப்பாக தொடங்கிய இந்தியா

2 mins read

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்திய அணி சிறப்பான தொடக்கத்தைச் சாதித்தது. இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 100 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. நாட்டிங்ஹாமில் நடந்த முதலாவது டெஸ்ட் 'டிரா'வில் முடிந்தது. 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் திடலில் தொடங்கியது.

இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் மூன்று பேர் மாற்றப்பட்டு இருந்தனர். 'பூவா தலையா' போட்டதில் வென்ற இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட், வானிலையை மனதில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்தியாவின் ரோகித்-ராகுல் ஜோடி முதல் 10 ஓவர்களில் 11 ஓட்டங்களே எடுத்தது. இதற்கிடையே, 46 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் 25 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.

ரோகித்-ராகுல் கூட்டணி 126 ஓட்டங்களை (43.4 ஓவர்) எட்டியபோது உடைந்தது. ரோகித் சர்மா 83 ஓட்டங்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தில் வீழ்ந்தார். பிறகு ராகுலுடன், இந்திய அணித் தலைவர் விராட் கோலி கைகோர்த்தார்.

அபாரமாக ஆடிய ராகுல், பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு தனது 6வது சதத்தை நிறைவு செய்தார்.

அத்துடன் வினோ மன்கட் (1952 ஆம் ஆண்டு), ரவிசாஸ்திரி (1990 ஆம் ஆண்டு) ஆகியோருக்கு பிறகு லண்டன் லார்ட்சில் சதம் விளாசிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற சிறப்பையும் ராகுல் பெற்றார்.