பாரிஸ்: உலகப் புகழ்பெற்ற நட்சத்திர ஆட்டக்காரரான போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (படம்) தாம் இப்போது விளையாடி வரும் இத்தாலியின் யுவெண்டஸ் குழுவிலிருந்து விலகி, இங்கிலாந்தின் பிரிமியர் லீக் வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி குழுவுக்கு விளையாடக்கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
தனது 36 வயது நட்சத்திரமான ரொனால்டோ, யுவெண்டஸ் குழுவில்தான் தொடர்ந்து விளையாடுவார் என்று அக்குழு தொடர்ந்து கூறி வந்தாலும், ரியால் மட்ரிட் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் குழுக்களின் முன்னாள் ஆட்டக்காரரான அவர் யுவெண்டஸ் குழுவிலிருந்து வெளியேற முடிவெடுத்து விட்டார் என்று இத்தாலிய ஊடகங்கள் கூறுகின்றன.
இத்தாலியின் ஸ்கை ஸ்போர்ட் செய்தித் தளம், அவர் யுவெண்டஸ் குழுவில் உள்ள தனது பொருட்கள் வைக்கும் பெட்டியிலிருந்து தனது உடைமைகளை அப்புறப்படுத்தி விட்டார் என்றும் இவ்வார இறுதியில், எம்போலி குழுவுடன் நடைபெறும் ஆட்டத்தில் பங்கேற்க விரும்ப வில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு குழுவிலிருந்து இன்னொரு குழுவுக்கு மாறும் நடவடிக்கை இடம்பெற வேண்டுமானால், அது மாறும் நடவடிக்கையின் இறுதி நாளான அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் நடந்தாக வேண்டும்.
இங்கிலாந்து தேசிய குழுவின் கேப்டன் ஹேரி கேனை தனது குழுவுக்கு ஈர்ப்பதில் தோல்வி கண்ட மேன் சிட்டி, ஐந்து முறை உலகின் தலைசிறந்த காற்பந்து வீரர் விருது பெற்ற ரொனால்டோவை எப்படியாவது தன் வசம் இழுத்து விட வேண்டும் என்று செயல்பட்டு வருகிறது.
முடிவு யாருக்கு சாதகமாக அமையும் என்பதைக் காண காற்பந்து ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

