இவ்வாண்டு டிசம்பர் 5ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிவரை நடக்க இருக்கும் ஆசியான் காற்பந்துக் கூட்டமைப்பின் சுசுகி கிண்ணப் போட்டிகளை சிங்கப்பூர் ஏற்று நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் பத்து அணிகள் இரு பிரிவுகளாக இப்போட்டித் தொடரில் மோதவுள்ளன.
நான்கு முறை சுசுகி கிண்ணத்தை வென்றுள்ள சிங்கப்பூர், ஐந்து முறை வெற்றியாளரான தாய்லாந்துடன் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளது. மியன்மார், பிலிப்பீன்ஸ் ஆகியவை அப்பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற இரு அணிகள். ஐந்தாவது அணியாக, தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி இடம்பெறும்.
'பி' பிரிவில் வியட்னாம், மலேசியா, இந்தோனீசியா, கம்போடியா, லாவோஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
டிசம்பர் 5ஆம் தேதி தேசிய விளையாட்டு அரங்கில் நடக்க இருக்கும் முதல் ஆட்டத்தில் சிங்கப்பூர்-மியன்மார் அணிகள் மோத இருக்கின்றன.
ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சுசுகி கிண்ணப் போட்டிகள் கடந்த ஆண்டு நடக்க இருந்த நிலையில், கொவிட்-19 பரவல் காரணமாக இவ்வாண்டிற்குத் தள்ளிவைக்கப்பட்டன.
கொரோனா பரவல் இன்னும் முடிவிற்கு வராத நிலையில், சுசுகி கிண்ணப் போட்டிகளில் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். வெளிநாட்டு அணியினர் இங்கு வந்திறங்கியபின் 'பிசிஆர்' சோதனை முடிவு வெளிவரும்வரை இருநாள்களுக்கு ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
2018ஆம் ஆண்டு நடந்த போட்டியில் வியட்னாம் வெற்றியாளராக வாகை சூடியது.

