அபுதாபி: நடப்பு இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ், கோல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் நான்காம் இடத்தைப் பிடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறப் போட்டிபோடுகின்றன.
நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் மும்பை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியைத் தோற்கடித்தது. முதலில் பந்தடித்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் 16 ஓட்டங்களில் இரண்டு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. ஆயினும், சௌரப் திவாரி (45), ஹார்திக் பாண்டியா (40*) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தாலும் பஞ்சாப் அணியின் மோசமான களக்காப்பாலும் ஆறு பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் அவ்வணி வெற்றிபெற்றது.
முன்னதாக நடந்த ஆட்டத்தில், கோல்கத்தா அணி, இரண்டாமிடத்தில் உள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு தோல்வியைப் பரிசாக அளித்தது.
ஸ்டீவன் ஸ்மித் (39), ஷிகர் தவான் (24), ரிஷப் பன்ட் (39) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இதனால், டெல்லி அணியால் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 127 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. நிதிஷ் ராணா இறுதிவரை களத்தில் நின்று 36 ஓட்டங்களைக் குவிக்க, கோல்கத்தா அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியது.
தற்போது 11 புள்ளிகளுடன் கோல்கத்தா அணி நான்காம் இடத்திலும் மும்பை அணி ஐந்தாமிடத்திலும் உள்ளன.

