நேஷன்ஸ் லீக் காற்பந்து: கடைசி நேர கோலால் கரைசேர்ந்த பிரான்ஸ்
டூரின்: தொடக்கத்தில் பின்தங்கினாலும் எழுச்சி காண்பதில் வல்லவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்தது பிரான்ஸ் காற்பந்து அணி.
ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் தியோ ஹெர்னாண்டஸ் அடித்த கோலால், அரையிறுதியில் 3-2 என்ற கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி, ஐரோப்பிய நேஷன்ஸ் லீக் காற்பந்துத் தொடரின் இறுதிச் சுற்றுக்கு பிரான்ஸ் முன்னேறியது.
பிரான்ஸ் அணிக்காக தியோ போட்ட முதல் கோலே முத்தான கோலாக அமைந்தது.
யானிக் கெராஸ்கோ 37வது நிமிடத்திலும் ரொமேலு லுக்காகு 40வது நிமிடத்திலும் அடித்த கோல்களால் முற்பாதியின் முடிவில் 2-0 என்ற வலுவான முன்னிலையுடன் இடைவேளைக்குச் சென்றது பெல்ஜியம்.
இருப்பினும், தமது சிறப்பான செயல்பாட்டால் பிரான்ஸ் அணியை நெருக்கடியில் இருந்து மீட்டார் கிலியன் எம்பாப்பே.
58வது நிமிடத்தில் அவர் ஏற்படுத்தித் தந்த கோல் வாய்ப்பைக் கோட்டைவிட்டார் கிரீஸ்மன்.
ஆனாலும், அடுத்த நான்காவது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் எம்பாப்பே. இம்முறை கரிம் பென்சிமா பந்தை மின்னல் வேகத்தில் எதிர் அணியின் வலைக்குள் தள்ளினார்.
அதன்பின் பெல்ஜிய ஆட்டக்காரர் யூரி டிலமான்சின் தப்பாட்டம் காரணமாக பிரான்சுக்கு பெனால்டி கிட்ட, அதன்மூலம் கோலடித்து ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டுவந்தார் எம்பாப்பே.
அதனையடுத்து, ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரான்ஸ் அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
இந்த ஆட்டத்தில் லூக்கஸ், தியோ ஹெர்னாண்டஸ் சகோதரர்கள் இணைந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.
மிலான் நகரின் சான் சிரோ விளையாட்டரங்கில் நாளை பின்னிரவு நடக்கும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ்-ஸ்பெயின் அணிகள் பொருதவிருக்கின்றன.