செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

'நாங்கள் எந்திர மனிதர்களைப் போல் நடத்தப்படுகிறோம்'

மட்ரிட்: அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம், 'யுயேஃபா' எனும் ஐரோப்பியக் காற்பந்து ஒன்றியம் இரண்டுக்கும் விளையாட்டாளர்களின் நலன் குறித்து அக்கறை இல்லை என்று கூறியுள்ளார் ரியால் மட்ரிட் வீரர் டிபோ கொர்ட்டுவா.

பணம் சம்பாதிக்க இரு அமைப்புகளும் காற்பந்து வீரர்களை அளவுக்கு அதிகமான ஆட்டங்களை விளையாடச் செய்வதாக சொன்ன அவர், வீரர்கள் எந்திர மனிதர்களைப் போல் நடத்தப்படுவதாகக் கூறி வன்மையாகக் கண்டித்துப் பேசினார். கூடுதலாக ஆடும் ஒவ்வோர் ஆட்டமும் கூடுதல் பணத்தைக் குவிக்கும் என்பதை கொர்ட்டுவா சுட்டினார்.

நட்சத்திரங்கள் வெளியேறிய இண்டியன் வெல்ஸ் போட்டி

இண்டியன் வெல்ஸ்: இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியிலிருந்து எதிர்பாராவிதமாக நட்சத்திரம் கெரொலினா பிலிஸ்கோவாவும் இப்போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு நடப்பு வெற்றியாளர் பியான்கா அண்ட்ரீஸ்குவும் வெளியேற்றப்பட்டுள்ளனர். மூன்றாம் சுற்று ஆட்டத்தில் பிரேசிலின் பியேட்ரிஸ் ஹட்டாட் மையாவிடம் 6-3, 7-5 எனும் ஆட்டக் கணக்கில் தோல்வியுற்றார் உலக டென்னிஸ் பெண்கள் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் பிலிஸ்கோவா.

மற்றோர் ஆட்டத்தில் போட்டியின் நடப்பு வெற்றியாளரான அண்ட்ரீஸ்குவை வென்றார் எஸ்டோனியாவின் எனெட் கொன்டவீட். ஆட்டக் கணக்கு, 7-6(7/5), 6-3. தொடர்ந்து 18 ஆட்டங்களாக வென்று வந்துள்ளார் கொன்டவீட்.

பாஸ்டன் நெடுந்தொலைவோட்டம்: கென்ய வீரர்கள் வெற்றி

பாஸ்டன்: கென்யாவின் பென்சன் கிப்ருட்டோ பாஸ்டன் நெடுந்தொலைவோட்டத்தின் ஆண்களுக்கான போட்டியை வென்றுள்ளார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் இரண்டு மணிநேரம் ஒன்பது நிமிடம் 51 வினாடி. கடந்த மே மாதம் செக் குடியரசின் தலைநகர் பிராகில் நடைபெற்ற போட்டியிலும் கிப்ருட்டோ வெற்றிகண்டார். எத்தியோப்பியாவைச் சேர்ந்த லெமி பெர்ஹானு இரண்டாவது இடத்திலும் அவரது சக நாட்டவரான ஜெமால் யிமர் மூன்றாவது இடத்திலும் வந்தனர்.

பெண்கள் போட்டியில் கென்யாவின் டயானா கியோகெய் வெற்றி வாகை சூடினார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் இரண்டு மணிநேரம் 24 நிமிடம் 45 வினாடி. 2017ஆம் ஆண்டில் பாஸ்டன் நெடுந்தொலைவோட்டப் போட்டியை வென்ற எட்னா கிப்லாகாட் இரண்டாம் இடத்தில் வந்தார். மூன்றாவது இடத்தைப் பிடித்தார் மேரி ங்குகி. மூவரும் கென்யாவைச் சேர்ந்தவர்கள். ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த போட்டி கொவிட்-19 சூழலால் ஒத்திவைக்கப்பட்டது.