புதுடெல்லி: உலகக் கிண்ண டி20 போட்டிகளுடன் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி உட்பட இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்புப் பொறுப்புகளில் இருக்கும் அனைவரது பதவிக்காலமும் முடிவடைகிறது.
இதனையடுத்து, புதிய பயிற்றுவிப்பாளரைத் தேடும் பணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கிவிட்டது. ஆயினும், அந்தத் தேடல் பணிக்கு அதிகக் காலம் ஆகலாம் என்பதை வாரியம் உணர்ந்துள்ளது.
அதனால், இடைக்காலமாக அனுபவமிக்க ஒருவர் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைவரான ராகுல் டிராவிட் (படம்) போன்ற ஒருவரிடம் அப்பொறுப்பை ஒப்படைக்க வாரியம் விரும்புவதாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி கூறுகிறது.
அணியின் முழுநேரப் பயிற்றுவிப்பாளராக டிராவிட்டை நியமிக்க வாரியம் விரும்பினாலும் அதிகம் பயணம் செய்ய வேண்டியிருக்கும் என்பதைக் காரணம் காட்டி, டிராவிட் அதனை மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதனிடையே, ஆஸ்திரேலியப் பயிற்றுநர்கள் சிலரும் இந்திய அணிக்குப் பயிற்சியளிக்க ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.


